விருதுநகர் : அண்ணனை வெட்டி கொன்ற தம்பி - கொலையில் முடிந்த திருமணம் மீறிய உறவு
விருதுநகர் மாவட்டத்தில், பெண் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பியை ராஜபாளையத்தில் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ராஜபாளையம் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் அப்பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரின் மனைவிக்கும், ராம்குமாரின் பால் பண்ணையில் வேலை பார்க்கும் அவரின் தம்பி உறவுமுறையுள்ள காளிராஜ் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளதாக தெரிய வந்தது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், அப்பெண் தன் கணவனை பிரிந்து தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு காளிராஜூடன் சென்றுவிட்டார். தொடர்ந்து காளிராஜ் மூலம் அப்பெணுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிந்த ராம்குமார், மனைவியிடம் இருந்து தனக்கு விவகாரத்து வழங்கவேண்டும் எனக்கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் சமரசம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், சமீபத்தில் பிறந்த குழந்தையும் அழைத்துக் கொண்டுஅப்பெண் மீண்டும் முதல் கணவர் வீட்டுக்கே திரும்பி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிராஜ், அப்பெண்ணை அழைத்து வர நேரில் சென்று பேசியிருக்கிறார். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார்.
இதனால் ராம்குமாருக்கும் - காளிராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விரோதத்தால் ஆத்திரமடைந்த காளிராஜ், பால் பண்ணையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ராம்குமாருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், காளிராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராம்குமாரை சரமாரியாக வெட்டிகொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார், ராம்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து காளிராஜை கைது செய்தனர்" என கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY