``புகாரை கசியவிட்டதால்'' - போரட்டம் அறிவித்த நாளில் படுகொலை... பரவும் வீடியோவும் பகீர் பின்னணியும்!
கனிமவள கொள்ளைக்கு எதிராக..
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி (வயது: 58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவள கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக, திருமயம் அருகே உள்ள துலையானூரில், அதன் அருகே உள்ள வலையன்வயலைச் சேர்ந்த ராசு மற்றும் ராமையா ஆகியவர்கள் சேர்ந்து நடத்தி வரும் ஆர்.ஆர் குரூப்ஸ் என்ற பெயரிலான கிரஷர் மற்றும் கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார். இந்நிலையில் தான், ஜகபர் அலி கடந்த 17-ம் தேதி அன்று தொழுகை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது குவாரி உரிமையாளர்களின் சதித்திட்டத்தால் 407 மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் சரணடைந்த குவாரி உரிமையாளர்
அதனைத்தொடர்ந்து, இது தொடர்பாக திருமயம் காவல்துறையினர் உயிரிழந்த ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராசு அவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் காசிநாதன் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் பெற்று புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். அதோடு, இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையா சில தினங்களுக்கு முன்பு நமணசமுத்திரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதற்கிடையில், சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவினரான கரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை உதவி இயக்குனர்கள் இரண்டு பேர் மற்றும் புவியியலாளர்கள் இரண்டு பேர் என இரண்டு குழுவினர் ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான துலையானூரில் உள்ள ஆர்.ஆர் குருப்ஸூக்கு சொந்தமான கல்குவாரிகளில் ட்ரோன் உதவியுடன் தொடர்ந்து இரண்டு நாள்கள் அளவிடும் பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தே.மு.தி.க உள்ளிட்டக் கட்சிகள் இந்த சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. ‘இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைப்பெற்று, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும்’ என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் மாற்றி உத்தரவிடப்பட்டது.
காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..
இந்நிலையில், ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக, திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
`புகார் மனுவை தாசில்தார் கசியவிட்டதால்..'
இதற்கிடையில், ஜகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு அடுத்த நாளே, ஜகபர் அலி கடந்த 13 - ம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டிக் அளித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், ‘ நான் பலருக்கும் மனு கொடுத்துவிட்டேன். 70,000 டாரஸ் லாரி அளவுள்ள கற்களை வெட்டி எடுத்து, பதுக்கி வைத்திருக்கிறார்கள். கடந்த மாதம் 26 -ம் தேதி நான் கொடுத்த புகார் மனுவை தாசில்தார் கசியவிட்டதால், அவற்றில் பாதி அளவை மறுபடியும் கல்குவாரி குழிகளுக்குள் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். மீதியுள்ள கற்களையும் கொண்டுவந்து கொட்டி மறைப்பதற்குள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்களாக குவாரிக்குள் போய் உண்மையை கண்டறியலாம் என்றால், குவாரியைச் சுற்றி நூற்றுக்கணக்கான ரவுடிகளை பயங்கர ஆயுதங்களுடன் நிறுத்தி அச்சுறுத்துகிறார்கள். இதனால், 17 -ம் தேதி மக்களை திரட்டி போராட போகிறேன்’ என்று பேசியிருந்தார். இந்நிலையில்தான், அவர் போரட்டம் அறிவித்திருந்த அதே 17 - ம் தேதி வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
குவார் உரிமையாளரின் அரசியல் பேச்சு..
இந்தச் சூழலில், தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான ஆர்.ஆர் குரூப்ஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான ராமையா நமணசமுத்திரம் நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் சரணடைந்த நிலையில், அவர் முன்பு பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ‘என் பெயர் ராமையா. திருமயம் தொகுதியில், துலையானூர் பஞ்சாயத்தை சேர்ந்தவன் நான். நான் கல்குவாரி, பெட்ரோல் பங்க், பைனான்ஸ் இந்த தொழிலெல்லாம் செஞ்சுக்கிட்டு வருகிறேன். கல்குவாரி சிறப்பாக செயல்படுறதால, அந்த வருமானத்துல செஞ்சுகிட்டு இருக்கிறேன். இது நடைமுறையில் இருக்கும்போது கடந்த 2020 - ல் ஊராட்சிமன்ற தலைவருக்குப் போட்டியிட்டு (இவரது மனைவி), அ.தி.மு.க மக்கள் சார்பில், வாக்காளர்கள் சார்பில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தோம். அதுக்கு பிறகு, நாங்கள் எல்லாம் கேட்டுக்கிட்டதுக்கு சார்பில் அண்ணன் எடப்பாடி அவர்கள், ஊராட்சிகள்தோறும் மினி க்ளினிக் ஆரம்பிச்சது மாதிரி, எங்கள் ஊருக்கும் தந்தாங்க. அந்த மினி க்ளினிக் திறப்பு விழாவுக்கு அண்ணன், நமது மாவட்டத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் அவர்கள் வருகைபுரிந்தார்.
அ.தி.மு.க-வைச் சேர்ந்த, நம்ம கட்சியைச் சேர்ந்த அமைச்சர் என்பதற்காக அந்த நிகழ்ச்சியை துலையானூரில் சிறப்பாக செஞ்சோம். அதில் நானே, 'மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும். அப்படி வந்தால், மக்களுக்கு இதுபோல் நிறைய சலுகைகள் கிடைக்கும். அதனால், அ.தி.மு.க-வுக்கு மீண்டும் ஓட்டு போடுங்க’ என்று கேட்டுக்கொண்டேன். அப்போது, விஜயபாஸ்கர் அவர்களும் என்னை அ.தி.மு.க உறுப்பினராக சேர்ந்துவிடுங்க அப்படினு கேட்டார். அதுக்கு நான் சொன்னேன், ‘ நான் பிறந்ததில் இருந்து அ.தி.மு.க உறுப்பினர்ண்ணே. எப்போதுமே, எங்க குடும்பமே அ.தி.மு.க குடும்பம். நாங்கள் எல்லாருமே அ.தி.மு.க-வுக்கு தான் ஓட்டு போடுவோம்’ அப்படினு அவர்கிட்ட சொன்னேன். அதுக்கு ரொம்ப சந்தோஷப்பட்டார். அதனால், எங்களுக்கு எப்போதுமே, எங்கள் குடும்பமே அ.தி.மு.க-வுக்கு பாசமான குடும்பம்தான்” என்று பேசியுள்ளார். இவர், இப்படி முன்பு பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் நிலையில், புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.