இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
வேங்கை வயல்: ``சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது'' -மூவர் தரப்பில் மனுத்தாக்கல்!
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் நடைப்பெற்று மூன்றாண்டுகள் தொடங்கியும் இன்னும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் கண்டித்தது. இதற்கிடையில், 40 -க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை, டி.என்.ஏ பரிசோதனை, 5 பேர்களிடம் குரல் மாதிரி சோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் மூன்று நபர்கள் ஈடுபட்டதாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த 20 -ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மற்றொருபுறம், ‘பாதிக்கப்பட்ட எங்களில் மூன்று பேரை குற்றவாளியாக்குவதா?’ என்று வேங்கைவயலைச் சேர்ந்த மக்கள் ஊரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தில் குதித்தனர். இதனால், ஊருக்கு முகப்பிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான போலீஸார், பேரிகாட் அமைத்து செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், வேங்கைவயல் கிராம மக்கள் மூன்றாவது நாளாக இன்றும் கருப்புக் கொடி ஏந்தி, உண்ணாநிலை அறப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதோடு, தங்களை வெளியில் விடாமலும், தங்களது உறவுக்காரர்கள் உள்ளிட்ட யாரையும் வேங்கைவயல் கிராமத்துக்குள் அனுமதிக்காமலும் காவல்துறையினர் தடுத்து வருவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், ’வேங்கை வயல் தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது‘ எனக் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த சம்பவம், தொடர்பான வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி சி.பி.சி.ஐ.டி. மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதில், இந்த வழக்கை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், புகார்தாரர்களை இதுவரை விசாரிக்காமல் இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனப் பட்டியலின மக்கள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பாரிவேந்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேலும், குற்றப்பத்திரி்கையின் நகல் வேண்டுமென்ற கோரிக்கையும் இந்த மனுவில் இடம் பெற்றுள்ளது. வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக வேங்கைவயல் கிராம மக்கள் மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.