சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கு: ’குவாரியில் தவறு நடந்திருப்பது உண்மை’-ஆய்வில் உறுதி
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக, திருமயம் அருகே உள்ள துலையானூரில், அதன் அருகே உள்ள வலையன்வயலைச் சேர்ந்த ராசு மற்றும் ராமையா ஆகியோர் நடத்தி வரும் ஆர்.ஆர் குரூப்ஸ் என்ற பெயரிலான கிரஷர் மற்றும் கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார். இந்நிலையில் தான், ஜகபர் அலி கடந்த 17-ம் தேதி அன்று தொழுகை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது குவாரி உரிமையாளர்களின் சதித்திட்டத்தால் 407 மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக திருமயம் காவல்துறையினர் உயிரிழந்த ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவுசெய்து இதில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் காசிநாதன் ஆகிய நான்கு பேரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் பெற்று புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். அதோடு, இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையா சில தினங்களுக்கு முன்பு நமணசமுத்திரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதற்கிடையில், சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவினரான கரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை உதவி இயக்குநர்கள் இரண்டு பேர் மற்றும் புவியியலாளர் இரண்டு பேர் என இரண்டு குழுவினர் ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான துலையானூரில் உள்ள ஆர்.ஆர் குருப்ஸூக்கு சொந்தமான கல்குவாரிகளில் ட்ரோன் உதவியுடன் தொடர்ந்து இரண்டு நாட்கள் அளவிடும் பணியை மேற்கொண்டனர்.
இன்னொருபக்கம், ‘இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற்று, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும்’ என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் மாrற்றி உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கனிமவளக் கொள்ளைக்கு எதிராக அளித்த புகாரின் பேரில் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக, திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதேபோல், கொலை செய்யப்படுவதற்கு முன்பு கடந்த 13 - ம் தேதி பேட்டியளித்திருந்த ஜகபர் அலி, ‘இந்த விசயத்தை திருமயம் தாசில்தார் கசியவிட்டார்’ என்று கூறியிருந்ததால், திருமயம் தாசில்தார் புவியரசன் உள்ளிட்ட 6 தாசில்தார்கள் நேற்று பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த அ.தி.மு.க நிர்வாகி ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கு எதிரொலியாக சம்பந்தப்பட்ட குவாரியில் கனிமவளத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அரசு நிர்ணயித்த அளவைவிட 6000 கியூபிக் மீட்டர் அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், குவாரியில் 1500 க்யூபிக் மீட்டர் வெட்டப்பட்ட கற்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இது குறித்தான அறிக்கை கனிம வளத்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மூலமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமவளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.