நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
Pune: ஐ.டி வேலைக்காக திரண்ட 3,000 இளைஞர்கள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கான நேரடி நேர்காணல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 3000-க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் வரிசைகட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஹிஞ்சவாடி என்ற பகுதியில் எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஐ.டி தொழில்நுட்ப மையம் இந்த நிகழ்வால் திணறியிருக்கிறது.
ஜூனியர் டெவலப்பர் வேலைக்காக அறிவிக்கப்பட்ட நேர்காணல், மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தகுதியான பல இளைஞர்கள் வேலை பெற்றுவிடும் நம்பிக்கையுடன் தங்கள் சுயவிவர குறிப்பை பற்றியபடி வரிசையில் நின்றுள்ளனர். கிட்டத்தட்ட 2,900 சுயவிவரங்கள் பெறப்பட்டுள்ளன.
வெறும் 100 பணியிடங்களை நிரப்புவதற்கு இவ்வளவு பெரிய அளவில் இளைஞர் கூட்டம் திரண்டது தகவல் தொழில்நுட்பத்துறையில் இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் வேலைவாய்ப்பின்மையின் தீவிரத்தையும் காட்டுகிறது.
Pune ஐடி துறையில் நிலவும் போட்டி
ஐடி துறையில் சிறந்து விளங்கும் இந்திய நகரங்களின் பட்டியலில் புனேவுக்கு முக்கிய இடம் உள்ளது.
பெரும் நிறுவனங்கள் நிறைந்திருந்தாலும் இளைஞர்கள் வேலைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. அனுபவம் நிறைந்தவர்களை விட கல்லூரி முடித்துவிட்டு முதன்முறையாக வேலைக்குச் செல்ல எத்தனிப்பவர்கள், இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோவுக்கு பலரும் பலவிதமாக கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் இன்னும் பலவகையான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
இதேபோல கடந்த அக்டோபர் மாதம் கனடாவில் உணவகங்களில் பரிமாறுபவர் மற்றும் சுத்தம் செய்பவர் போன்ற வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு நடந்தபோது ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் திரண்டதையும், 10 வேலைவாய்ப்புகளுக்காக 1800 இன்ஜினீயர்கள் குஜராத்தில் திரண்டதையும் இந்த நிகழ்வு நினைவுபடுத்துகிறது.