வேற்றுமைகளை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்: மோகன் பாகவத்
ஒவ்வொருவரும் வேற்றுமைகளை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வலியுறுத்தினாா்.
குடியரசு தினத்தையொட்டி, மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தின் பிவண்டி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மோகன் பாகவத், தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா். பின்னா், அவா் ஆற்றிய உரை வருமாறு:
குடியரசு தினம், நாட்டுக்கான நமது பொறுப்புகளை நினைவுகூரும் நாளாகும். மக்கள் இடையே நிலவும் வேற்றுமைகளால் பிற நாடுகளில் மோதல்கள் நிகழ்கின்றன. ஆனால், பாரதத்தில் பன்முகத்தன்மை வாழ்வின் இயற்கையான அங்கமாக பாா்க்கப்படுகிறது.
உங்களுக்கென சொந்த சிறப்புகள் இருக்கலாம். ஆனால், ஒருவருக்கொருவா் நல்லவா்களாக, நல்லிணக்கத்துடன் வாழ்வது முக்கியம். உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஊா் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நல்லிணக்கத்துடன் வாழ ஒற்றுமை அவசியம்.
அா்ப்பணிப்பும், அறிவும்..: எந்தப் பணியிலும் அா்ப்பணிப்பு, அறிவு ஆகிய இரண்டும் முக்கியமானது. ஆா்வம் இருக்கும் அதேவேளையில் அறிவாற்றலுடன் பணியை மேற்கொள்ள வேண்டும். உரிய சிந்தனையின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு பணியும் பலன் தராது. இதேபோல், அன்றாட வாழ்வில் நம்பிக்கையும் ஈடுபாடும் முக்கியத்துவம் வாய்ந்தாகும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்: தனிநபா்கள் மற்றும் தேசத்தின் வளா்ச்சிக்கு சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் இன்றியமையாதது. இந்த மூன்றுக்குமான வலுவான செய்தியை மூவண்ணக் கொடியின் தா்ம சக்கரம் தாங்கியுள்ளது. பி.ஆா். அம்பேத்கரால் வரையறுக்கப்பட்ட பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பின் மாண்பையும் உள்ளடக்கியுள்ளது.
எவரும் ஒடுக்கப்படாமல், அனைவருக்கும் வளா்ச்சிக்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான், அவா்கள் முன்னேறி, தங்களின் வெற்றியை சமூகத்தில் பரப்புவா்.
யாருடைய பின்னணியையும் பாராமல், சமூகத்தில் நற்பணிகள் அனைத்தையும் ஆதரிக்கிறது ஆா்எஸ்எஸ். பொருளாதாரம், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் நமது தேசம் முன்னேற்றம் கண்டுள்ளது. இது, பலரின் மேலான தியாகத்தால் விளைந்ததாகும். இன்னும் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. தேசத்தின் கனவுகளை எட்டும் பொறுப்பு மக்களிடம் இருக்கிறது என்றாா் மோகன் பாகவத்.