பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
`போதைப்பொருள் வழக்கு டு தலைமறைவு டு சந்நியாசி..!’ - கும்பமேளாவில் நடிகை மம்தா குல்கர்னி
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவர் சந்நியாசியாக மாறிக்கொண்டார். அவர் கழுத்தில் ருத்ராட்ச மாலை மற்றும் காவி ஆடை அணிந்து சந்நியாசியாக வலம் வருகிறார். மம்தா குல்கர்னி 25 ஆண்டுகள் தலைமறைவாக வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தார். அவர் மும்பையில் போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்தே கும்பமேளாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே கடந்த மாதம் இந்தியா வந்தார்.
ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவிற்கு சென்ற அவர் அங்கு சந்நியாசியாகிவிட்டார். அங்கு ஆன்மிகவாதிகளை உருவாக்கும் கின்னார் அகதா மையத்தில் சேர்ந்து தன்னை மகாமண்டலேஷ்வராக மாற்றிக்கொண்டு தனது பெயரையும் மாற்றி புதிய அடையாளத்துடன் புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
திடீரென சந்நியாசியாக மாறி இருப்பது குறித்து மம்தா குல்கர்னி நிருபர்களுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார். அவர் தனது பேட்டியில், ''ஆதிசக்தி கருணையால்தான் எனக்கு இந்த மரியாதை கிடைத்துள்ளது. கின்னார் அகதாவில் எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. அதோடு சுதந்திரமாகவும் இருக்க முடிகிறது. எனவே கின்னார் அகதாவின் ஒரு பகுதியாக இருக்க முடிவு செய்துள்ளேன்''என்றார்.
சினிமா துறையில் தனது நீண்ட அனுபவத்தை நினைவுகூர்ந்த முன்னாள் நடிகை, "வாழ்க்கையில் பொழுதுபோக்கு உட்பட அனைத்தும் உங்களுக்குத் தேவை. உங்கள் தேவைகளை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். ஆனால் ஆன்மிகம் என்பது அதிர்ஷ்டத்தால் மட்டுமே நீங்கள் அடையக்கூடிய ஒன்று. சித்தார்த்தர் (புத்தராக மாறிய இளவரசர் சித்தார்த்த கௌதமர்) தனது வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு பின்னர் மாற முடிவு செய்தார்" என்று கூறினார்.
மீண்டும் சினிமாவிற்குள் நுழைவீர்களா என்று கேட்டதற்கு,''அது பற்றி நான் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை. அதற்கு நிச்சயம் சாத்தியம் இல்லை''என்றார். ஏன் சந்நியாசியாக மாறினீர்கள் என்று கேட்டதற்கு, கின்னார் அகதாவை சேர்ந்தவர்கள் சிவனின் அவதாரமான அர்த்தநாரேஷ்வரரின் அவதாரத்தை பிரதிபலிப்பவர்களாக இருக்கின்றனர். அத்தகைய அகதாவில் மகாமண்டலேஷ்வராவது எனது 23 ஆண்டுகால ஆன்மிக பயிற்சிக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கத்தை பெறுவது போன்றது ஆகும்” என்றார்.
மம்தா குல்கர்னி போதைப்பொருள் கடத்தல் மன்னன் விக்கி கோஸ்வாமியை காதலித்து வந்தார். விக்கி கோஸ்வாமி போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டபோது அவரை சிறையில் வைத்து மம்தா குல்கர்னி திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் விக்கியை தான் திருமணம் செய்யவில்லை என்றும், அவருடன் டேட்டிங்கில் இருந்தது உண்மை என்று மம்தா குல்கர்னி உறுதிபடுத்தி இருக்கிறார். 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திடீரென பாலிவுட்டில் இருந்து விலகிய மம்தா குல்கர்னி அதன் பிறகு ஆன்மிக பாதையில் தனது கவனத்தை திசை திருப்பினார்.
பாலிவுட்டில் இருந்து விலகிய பிறகு பங்களாதேஷில் ஒரு படத்தில் நடித்தார். அதுவே அவரது கடைசி படமாகும். மம்தா குல்கர்னி சந்நியாசியாகும் நோக்கத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கின்னார் அகதாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், ஆன்மிக காரியங்களில் ஈடுபட்டதாகவும் கின்னார் அகதா தெரிவித்துள்ளது. எனவேதான் கின்னார் அகதாவில் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்பட்டதாக கின்னார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இனி மம்தா குல்கர்னி தொடர்ந்து இந்தியாவில் இருப்பாரா அல்லது மீண்டும் வெளிநாட்டிற்கு செல்வாரா என்று தெரியவில்லை. மம்தா குல்கர்னிக்கு திடீரென மகாமண்டலேஷ்வர் பட்டம் கொடுக்கப்பட்டு இருப்பது குறித்து அப்பட்டம் பெற்ற சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். மம்தா குல்கர்னி இதற்கு முன்பு திருமணத்திற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியவர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு மம்தா குல்கர்னி போதைப்பொருள் வழக்கிலும் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.