`உதவியற்ற நிலையில் அவர் இருந்தார்' - விவாகரத்து மனுவை திரும்ப பெற்றது பற்றி வினோத் காம்ப்ளி மனைவி!
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் மும்பை அருகில் உள்ள தானே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது வீட்டில் உடல் நலம் தேறி வரும் வினோத் காம்ப்ளி மது பழக்கத்திற்கு அடிமையாகி தனது கிரிக்கெட் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டார். அடிக்கடி குடிபோதையில் அவர் வசிக்கும் கட்டடத்தில் வசிக்கும் மற்ற குடியிருப்புவாசிகள் மற்றும் கட்டட வாட்ச்மென்களுடன் தகராறு செய்வதுண்டு. சமீபத்தில் மும்பை வாங்கடே ஸ்டேடியத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வினோத் காம்ப்ளி தனது மனைவியின் துணையோடு வந்து கலந்து கொண்டார். வினோத் காம்ப்ளிக்கு அவரது மனைவி பக்க பலமாக இருக்கிறார். வினோத் காம்ப்ளி மனைவி ஆண்ட்ரியா ஹெவிட் அவருக்கு இரண்டாவது மனைவியாவார். ஒரு முறை ஆண்ட்ரியா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு அவரே அந்த மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றது குறித்து ஆண்ட்ரியா கூறுகையில், ''வினோத் காம்ப்ளியை விட்டு விலகுவது குறித்து நான் பரிசீலித்ததுண்டு. ஆனால் நான் எப்போதும் அவரது உடல் நலம் குறித்து கவலைப்படுவதுண்டு. 2023ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்ய மனுத்தாக்கல் செய்தேன். ஆனால் நான் விட்டுவிட்டால் அவர் யாருமில்லாத உதவியற்ற நபராக மாறிவிடுவார். அவர் குழந்தையை போன்றவர். எனவே அது என்னை மிகவும் பாதித்தது. அவரை நினைத்து கவலையாக இருந்தது. நான் எனது நண்பர்களைக்கூட கைவிட்டது கிடையாது. அவர் நண்பர்களுக்கும் மேலானவர். அவரை விட்டு விலகிச் சென்றபோது அவர் சாப்பிட்டாரா இல்லையா, உறங்கினாரா என்ற கவலை எனக்கு இருந்து கொண்டே இருந்தது. அதன் பிறகுதான் எனக்கு அவர் தேவை என்பதை புரிந்து கொண்டேன்.
எனவே விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டேன். ஆண்ட்ரியாவை 2006ம் ஆண்டு தனிப்பட்ட முறையில் கோர்ட் மூலம் வினோத் காம்ப்ளி திருமணம் செய்து கொண்டார். ஒரு நேரத்தில் வினோத் காம்ப்ளி சச்சின் தெண்டுல்கருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். ஆனால் தான் கஷ்டப்படும்போது சச்சின் உதவவில்லை என்று வினோத் காம்ப்ளி தெரிவித்ததுண்டு. 2023ம் ஆண்டு வினோத் காம்ப்ளி குடிபோதையில் தனது மனைவி மீது பாத்திரத்தை தூக்கி எறிந்தார். அதனை தொடர்ந்து ஆண்ட்ரியா தனது கணவர் மீது மும்பை போலீஸில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து விவாகரத்து மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.