ஆளுங்கட்சி நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்: பரந்தூரில் விஜய் பேச்சு
Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் ABC மால்ட் (ABC Malt)... எல்லோருக்கும் ஏற்றதா?
Doctor Vikatan: சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் ABC மால்ட் என ஒரு ஹெல்த் டிரிங்க் பிரபலமாகி வருகிறது. ஆப்பிள், பீட்ரூட், கேரட் சேர்த்த பவுடர் என்றும் அதை பாலில் கலந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம் என்றும் சொல்லி விளம்பரப்படுத்துகிறார்கள். அது உண்மையிலேயே ஆரோக்கியமானதுதானா... எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
நிறைய பிராண்டுகளில் ஏபிசி மால்ட் (ABC Malt) என்ற ஹெல்த் டிரிங்க் விற்கப்படுவதைப் பார்க்கிறோம். அப்படிக் கிடைக்கும் பலவற்றிலும் அந்த பானத்தின் ஊட்டச்சத்து குறித்த தகவல்கள் இல்லை. ஆப்பிள், பீட்ரூட், கேரட், பிரவுன் சுகர் என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாலிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை, பழுப்பு சர்க்கரை என ஒவ்வொரு பிராண்டில் ஒவ்வொரு விதமாக இனிப்பு சேர்த்திருப்பதையும் பார்க்க முடிகிறது. 100 கிராம் பவுடரில் 75 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதாக சில பிராண்டுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். எந்தச் சர்க்கரையாக இருந்தாலும், அது அளவுக்கு மிஞ்சும்போது ஆரோக்கியமற்றதுதான். ஊட்டச்சத்து தகவல்கள் குறிப்பிடப்படாத எந்த பிராண்டின் தயாரிப்பும் நம்பகத்தன்மை அற்றதே.
எந்தெந்தப் பொருள்கள் எந்தெந்த அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் இருப்பதில்லை. அதைக் குடித்தால் எத்தனை கலோரிகள் உடலில் சேரும், எவ்வளவு கார்போஹைட்ரேட் சேரும் என்ற தகவல்கள் இல்லை. குறிப்பிட்ட ஒரு பிராண்டில், 100 கிராமில் 390 கலோரிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த 100 கிராமில் கார்போஹைட்ரேட் மட்டுமே 90 கிராம் இருக்கிறது. சர்க்கரை 90 கிராம் இருக்கிறது. இது ரொம்பவே அதிகமானது. இந்த அளவு சர்க்கரை சேர்த்த பானம் ஆரோக்கியமானதல்ல.
எனவே, முழுமையான ஊட்டச்சத்து தகவல்கள் இல்லாத பாக்கிங்கை நம்பி, மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் பரிந்துரையும் இன்றி, இதுபோன்ற பானங்களைக் குடிப்பது சரியானதல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.