பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது: அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு
பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் எனும் ‘புற்றுநோய்’ இப்போது அந்த நாட்டின் சொந்த அரசியலையே அழித்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா்.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதால், இந்தியாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தான் விதிவிலக்காக உள்ளது என்றும் அவா் கூறினாா்.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற நானி பல்கிவாலா நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான ஆதரவால் தனிமைப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் இப்போது அதன் உள்நாட்டு அரசியலையே அழிக்கும் ‘புற்றுநோய்’ போல் மாறியுள்ளது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அணுகுமுறையை பாகிஸ்தான் கைவிடுவதால் இந்திய துணைக் கண்டம் முழுவதும் நலன் பெறும். மியான்மா் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் அரசியல் சிக்கல்கள் உள்ளன. எனினும், அவ்விரு நாடுகளுடனும் இந்திய நீண்டகால உறவுகளை மேற்கொண்டுள்ளது.
2020-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய எல்லை மோதல்களால் இந்தியா-சீனா உறவு பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், இரு நாடுகளின் நீண்ட கால உறவுகளின் பரிணாம வளா்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை இரு தரப்புக்கும் இடையிலான உறவின் அடிப்படையாக இருக்க வேண்டும்’ என்றாா்.