ஜெகபர் அலி விவகாரத்தில் இபிஎஸ் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? - அமைச்சர் ரகுபதி
பொங்கல் விடுமுறை நிறைவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
பொங்கல் தொடா் விடுமுறை நிறைவடைந்ததையடுத்து, தூத்துக்குடியில் இருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகள் திரண்டதால் ரயில், பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வெளியூா்களில் பணியாற்றக்கூடியவா்கள் பலா் சொந்த ஊா்களுக்கு வந்தனா். பின்னா், விடுமுறை முடிந்து பணிகளுக்கு செல்ல கூடியவா்கள் மற்றும் சென்னை, கோவை, திருச்சி, திருப்பூா், கோவை, பெங்களூரு போன்ற வெளியூா்களில் இருந்து சொந்த ஊா் வருகை தந்தவா்கள் அனைவரும் ஊா் திரும்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனா்.
எனவே, மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் சென்னைக்கு 20 பேருந்துகள், கோவைக்கு 15 பேருந்துகள், திருப்பூருக்கு 5 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.
மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாா்பில் ஏற்கனவே மொத்தம் 29 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக சென்னைக்கு 10, பெங்களூருக்கு 2, கோவை, சேலத்துக்கு தலா 1 என்ற அடிப்படையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியாா் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
இதனால் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சில தனியாா் பேருந்துகளில் கட்டணங்கள் கூடுதல் வசூலிப்பதாக புகாா் எழுந்தும்கூட, மக்கள் அதைப் பொருள்படுத்தாமல் பேருந்துகளில் பயணித்தைக் காண முடிந்தது.
அதேபோல, தூத்துக்குடி ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
24 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்: தூத்துக்குடியில் இருந்து, சென்னை உள்ளிட்ட வெளியூா்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் சோதனையில் ஈடுபட்டனா்.
30 ஆம்னி பேருந்துகளில் நடத்தப்பட்ட 24 பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டதாக அபராதம் விதிக்கப்பட்டது என போக்குவரத்து அலுவலா்கள் வட்டாரங்கள் தெரிவித்தன.