தில்லி மக்களின் சிறந்த தேர்வாக காங்கிரஸ் உருவெடுக்கும்: பைலட்
வரவிருக்கும் தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி அரசுக்கும், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையேயான மேலாதிக்கப் போரில் தலைநகரில் உள்ள மக்கள் அவதிப்படுவதாகக் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மக்கள் விழிப்பாக உள்ளனர். இந்த முறை தில்லி மக்கள் ஏமாறமாட்டார்கள் காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். தில்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே போர் நிலவி வருகிறது. இதில் மக்கள்தான் அவதிப்படுகிறார்கள்.
மக்களின் சிறந்த தேர்வாக காங்கிரஸ் கட்சி உருவெடுத்துள்ளது. தில்லி பேரவைத் தேர்தலில் மக்கள் அதற்கான ஆணை வழங்குவார்கள். தில்லி மக்களுக்கு நாங்கள் சில உத்தரவாதங்களை அளித்துள்ளோம்.
ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நடந்த வளர்ச்சியையும் மக்கள் நினைவு கூர்கின்றனர். நாங்கள் வலுவாக போராடுவோம், தில்லி தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்படும் என்று ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வர் கூறினார்.