குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
``ப்ளான் அப்ரூவல் செய்ய ரூ.20,000 லஞ்சம்..'' கறாராக வசூலித்த நகராட்சி அலுவலர் கைது..!
பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர் ஒருவர், தனது வாடிக்கையாளருக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான பிளான் அப்ரூவல் கோரி பரமக்குடி நகராட்சியில் மனு அளித்துள்ளார். இதற்கான அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் அவர் செலுத்தியுள்ளார். கட்டணம் செலுத்தி பல நாள்களாகியும் ப்ளான் அப்ரூவல் ஆகவில்லை. இதையடுத்து அந்த பொறியாளர் பரமக்குடி நகராட்சியில் நகரமைப்பு திட்ட அலுவலராக பணிபுரியும் பர்குணனை சந்தித்து விபரம் கேட்டுள்ளார்.
ஆனால் பர்குணன், அந்த பொறியாளரிடம் வீடு கட்ட பிளான் அப்ரூவல் தர ஒரு வீட்டிற்கு ரூ.5 ஆயிரம் வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20 ஆயிரம் ரூபாயினை லஞ்சமாக கேட்டுள்ளார். ஏற்கெனவே நகராட்சிக்கு உரிய கட்டணத்தை செலுத்திய நிலையில் மேலும் ரூ 20 ஆயிரம் தர இயலாது. எனவே ப்ளானை அப்ரூவல் செய்து தருமாறு பணிவாக கேட்டுள்ளார். ஆனாலும் அந்த அலுவலர் மனம் இறங்கவில்லை.
இந்நிலையில், நேற்று அந்த பொறியாளர் நகரமைப்பு திட்ட அலுவலர் பர்குணனை மீண்டும் சந்தித்து ப்ளான் அப்ரூவல் கேட்டுள்ளார். ஆனால் பர்குணனோ, ரூ 20 ஆயிரத்தை கொடுத்தால் இன்றே அப்ரூவல் செய்கிறேன். இல்லையேல் அப்படியே கிடப்பில் போட்டுவிடுவேன் என கூறியுள்ளார். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த பொறியாளர், இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸார், அந்த பொறியாளரிடம் அதிகாரி பர்குணன் கேட்டபடி ரூ.20 ஆயிரத்தை ஜி பே மூலம் அனுப்ப கூறினர். அவர் பர்குணனின் செல்போன் எண்ணுக்கு ஜி பே மூலம் பணத்தை அனுப்பிய நிலையில் நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார், பர்குணனை கைது செய்ததுடன், அவரது செல் போனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.