தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: ராகுல் பெருமிதம்
புத்தகப் பையில் நாட்டு வெடிகுண்டு… +1 மாணவருக்கு கத்திக் குத்து… வகுப்பறையில் வெடித்த காதல் பிரச்னை!
ஒன்றரை அடி நீள பட்டக்கத்தி...
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் +1 படித்து வரும் சஞ்சய், குமரன் என்ற இரண்டு மாணவர்கள் (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன), தனித்தனி அணியாக செயல்பட்டு வந்திருக்கின்றனர். இதனால் அவ்வப்போது இரு தரப்பினருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் குமரன் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்திருக்கிறார்.
இதை தெரிந்து கொண்ட சஞ்சய், அந்த மாணவியின் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கினார். அத்துடன் அதிலிருந்து குமரனுக்கு ரெக்வஸ்ட் கொடுத்திருக்கிறார். அதை அவர் அக்செப்ட் செய்தவுடன், காதலியைப் போல இன்பாக்சில் பேசி வந்திருக்கிறார் சஞ்சய். குமரனும் தன்னுடைய காதலிதான் பேசுவதாக நினைத்து, பல தகவல்களை பகிர்ந்து வந்திருக்கிறார்.
மூன்று மாதங்கள் கடந்த நிலையில், `நான் உன்னுடைய காதலியே இல்லை. இவ்ளோ நாளா நீ என்கிட்டதான் பேசிக்கிட்டிருக்க. இப்படி என்கிட்ட மொக்கை வாங்கிட்டியே…’ என்று குமரனை கேலி செய்த சஞ்சய், அதை சக மாணவர்களிடமும் கூறியிருக்கிறார். அந்த தகவல் பள்ளி முழுவதும் பரவியதால் குமரன் அதை அவமானமாகக் கருதினார். அதற்காக அந்த மாணவரை பழிவாங்க முடிவு செய்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணி இடைவெளியில், சஞ்சை சக மாணவர்களுடன் சேர்ந்து கேலி செய்திருக்கிறார். அதில் கோபமடைந்த குமரன் வகுப்பறைக்குச் சென்று தன்னுடைய புத்தகப் பையில் இருந்த பட்டாக் கத்தியை எடுத்துக் கொண்டு, சஞ்சையை நோக்கி ஓடினார். கையில் கத்தியுடன் ஓடிய சஞ்சையைப் பார்த்து அங்கிருந்த மற்ற மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் குமரனை மடக்கிப் பிடித்தனர். ஆனால் அதையும் மீறி பாய்ந்து சென்று சஞ்சையை கத்தியால் குத்தினார் குமரன். அது சஞ்சையின் கையை துளைத்தது. ரத்த வெள்ளத்தில் அவர் அலறித் துடித்த நிலையில், மீண்டும் கத்தியுடன் பாய்ந்தார் குமரன். ஆனால் அதற்குள் அங்கிருந்த ஆசிரியர்கள் குமரனை மடக்கிப் பிடித்ததுடன், அவரது கையில் இருந்த கத்தியை பிடுங்கி வீசினர்.
தொடர்ந்து சஞ்சையை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மாணவர்கள், அதன்பிறகு குமரனின் புத்தகப் பையை திறந்து பார்த்தனர். அதில் ஆறு நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போன அவர்கள், ரெட்டியார்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்ததுடன், மாணவர் குமரனிடம் அதுகுறித்து விசாரணை செய்தனர். அப்போது மாணவர் கூறிய தகவலைக் கேட்டு போலீஸாரே அதிர்ந்து போயிருக்கின்றனர். சஞ்சையை பழிவாங்க முடிவெடுத்த குமரன், அதற்காக புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சென்று ஒன்றரை அடி நீள பட்டாக் கத்தியை வாங்கி வந்திருக்கிறார்.
அதையடுத்து அரியாங்குப்பம் சென்று பட்டாசுகளை வாங்கிப் பிரித்து, மருந்தை தனியாக எடுத்திருக்கிறார். அதன்பிறகு யு-டியூபைப் பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்திருக்கிறார். கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த குமரனின் தந்தை போலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.