பட்டுக்கோட்டை: ஒரே இரவில் ஐந்து இடங்களில் தொடர் கொள்ளை - மங்கி குல்லா திருடர்களால் மக்கள் அச்சம்!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பகுதிகளில் கடந்த 21ம் தேதி இரவு வீரக்குறிச்சி, சாமியார் மடம், உதய சூரியபுரம், கொண்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், பொருள்களை கொள்ளையடித்து சென்றனர். ஒரே இரவில் ஐந்து இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து நேற்று காலை அனைவருக்கும் தெரியவந்தது.
பழக்கடையில் ரூ.3,000, அரிசி கடையில் 20,000, செல்போன் கடையில் செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளயடித்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றவர்கள் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கின்றனர். இதே போல் கடை ஒன்றில் உள்ளே சென்றவர்கள் கல்லாவில் பணம் இல்லாத ஆத்திரத்தில் கல்லாவை வெளியே எடுத்து வந்து ரோட்டில் போட்டு உடைத்து விட்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சங்கிலி தொடர் கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸ் கொள்ளைபோன கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி மேமரா காட்சிகளும் வெளியானது. இதில் கையில் இருப்பு ராடுடன் மங்கி குல்லா அணிந்து வரும் ஒருவர், கடையின் முகப்பில் எரியும் லைட்டை ஆஃப் செய்து விட்டு, இரும்பு ராடால் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கடையில் கொள்ளையடிக்கிறார்.
அவனை தொடர்ந்து மங்கி குல்லா அணிந்த மற்றொருவர் உள்ளே செல்கிறார். எந்த பதற்றமும் பயமும் இல்லாமல் சாவகாசமாக இரண்டு பேரும் கொள்ளையடித்து விட்டு செல்கின்றனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய சிலர், ``பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது. இதனால் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. ஒரே இரவில் ஐந்து இடங்களில் கொள்ளையடித்த கும்பல் கூட கஞ்சா போதையில் தைரியமாக இதை செய்திருப்பார்கள் என நினைக்கிறோம். இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். போலீஸார் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை இதுவரை கைது செய்யாததும் அச்சம் அதிகரிக்க காரணம்" என்றனர். போலீஸ் தரப்பிலோ, சிசிடிவி காட்சிகளை வைத்து தேடப்படும் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றனர்.