குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
தாய்லாந்தில் திருமணம் செய்துகொண்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள்!
தாய்லாந்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம் இன்று(ஜன. 23) அமலுக்கு வந்துள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
தாய்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதா கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
மேலும் தாய்லாந்தின் இந்த சமத்துவ திருமண மசோதா, 'ஆணும் பெண்ணும்' என்பதை 'தனிநபர்கள்' என்றும் 'கணவனும் மனைவியும்' என்ற வார்த்தைகளை 'திருமணமான தம்பதிகள்' என்றும் மாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு முழு சட்ட, நிதி மற்றும் மருத்துவ உரிமைகளை வழங்குகிறது.
இதையடுத்து ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையைப் பெற்றது தாய்லாந்து.
ஆசியாவில் தைவான், நேபாளம் நாடுகளுக்கு அடுத்து மூன்றாவது நாடாக தாய்லாந்து, ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்துள்ளது.
அதன்படி சட்டம் அமலுக்கு வந்த இன்று, மத்திய பாங்காக்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று நடைபெற்ற கொண்டாட்டத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டனர்.
முதல் நாளிலே சுமார் 300 தன்பாலின திருமணங்கள் பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 200 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்பார்த்ததைவிட இது குறைவு என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்று உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் தன்பாலின திருமணங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.