தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: ராகுல் பெருமிதம்
அதிபராக பதவியேற்றவுடனேயே டிரம்ப் அமைச்சரவையில் விரிசல்?
அமெரிக்காவில் அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையில் விவேக் ராமசாமியின் விலகலுக்கு எலான் மஸ்க்தான் காரணம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே அரசுத்துறை செயல்திறன் மேம்பாட்டுத் துறை (DOGE) தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்தார். 2026 ஆம் ஆண்டு ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் தேர்தலில் போட்டியிடவிருப்பதால்தான், தற்போது பதவி விலகுவதாக விவேக் ராமசாமி கூறினார்.
இந்த நிலையில், வாஷிங்டன் அரசியலில் விவேக் ராமசாமியின் தலையிடுதல் கூடாது; அவரை மாநில அரசியலில் ஈடுபடுத்தலாம் என்று கூறியதுடன், எச்-ஒன்பி விசா மீதான விவேக் ராமசாமியின் எதிர்ப்பைக் காரணம் காட்டி, அவரை செயல்திறன் பதவியிலிருந்து விலக வைக்க டிரம்ப்பிடம் எலான் மஸ்க் அழுத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:தாய்லாந்தின் முதல் ஒலிம்பிக் நாயகனுக்கு 3 ஆண்டுகள் சிறை!
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றவுடனேயே சில அறிவிப்புகளை அறிவித்தார். அவற்றில், அரசுத்துறைகள் செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் அறிமுகமும் அடங்கும். இந்தப் புதிய துறையின் தலைவர்களாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும், இந்திய - அமெரிக்கத் தொழிலதிபரும் குடியரசுக் கட்சியின் முக்கியத் தலைவருமான விவேக் ராமசாமியும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அமெரிக்கக் கலாசாரம் சிறப்பானவற்றைக் காட்டிலும், அற்பமானவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், பல்வேறு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைப் பணியமர்த்துகிறது என்று விவேக் ராமசாமி கடந்த டிசம்பரில் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, எச்-ஒன்பி விசா திட்டத்துக்கு விவேக் ராமசாமி எதிர்ப்பு தெரிவித்ததால், அவருக்கும் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் தரப்பினருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.