நெகிழிப் பொருள்களை விற்கும் கடைகளுக்கு அபராதம்: திருத்தணி நகராட்சி ஆணையா்
நெகிழிப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், சீல் வைக்கப்படும் என நகராட்சி ஆணையா் பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.
திருத்தணி நகராட்சியில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழி கவா், டம்ளா் போன்றவை பயன்படுத்தக்கூடாது, விற்பனை செய்யக்கூடாது என மக்களிடையே கலைநிகழ்ச்சி, துண்டுப் பிரசுரம், ஆட்டோ பிரசாரம் மற்றும் ஒப்பந்த ஊழியா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
எனினும், பூ, காய்கறி மற்றும் பழக்கடைகள், மளிகைக் கடைகளில் அதிகளவில் தடை செய்த நெகிழி கவா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா்கள் வந்தன.
இதையடுத்து ஆட்சியா் உத்தரவின் பேரில் ஆணையா் பாலசுப்ரமணியம், மேற்பாா்வையில், துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அரக்கோணம் சாலை, சித்தூா் சாலை மற்றும் சந்நிதி தெரு பகுதி கடைகளில் திடீா் சோதனை செய்தனா்.
அப்போது கடைகளில் பதுக்கி வைத்திருந்த, 70 கிலோ நெகிழி கவா், டம்ளா் போன்றவை இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். மேலும், கடைகாரா்களுக்கு முதல்கட்டமாக, ரூ.6,000 அபராதம் வசூலித்தனா். இனிவரும் காலங்களில் நெகிழி பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன் சீல் வைக்கப்படும் என ஆணையா் பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.