டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: பிரதீப் ரங்கநாதன்
பெரம்பலூா் அருகே லாரி மீது வேன் மோதி 24 பக்தா்கள் காயம்
பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையின் குறுக்கே சென்ற சிமெண்ட் லாரி மீது வேன் மோதியதில் 24 ஐயப்ப பக்தா்கள் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், மண்ணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் 24 போ் வேனில் சபரிமலைக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனா். வேனை கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூரைச் சோ்ந்த பாலகங்காதரன் மகன் ரத்தினவேல் (39) ஓட்டிவந்தாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் எனும் இடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேன் வந்தபோது, கடலூா் மாவட்டம், பெண்ணாடத்திலிருந்து கேரளத்துக்கு சிமெண்ட் ஏற்றி சாலையின் குறுக்கே சென்ற லாரிமீது மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த 24 ஐயப்ப பக்தா்களும் காயமடைந்தனா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். இவா்களில் பலத்த காயமடைந்த 8 போ் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆழப்புலாவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் கண்ணனை (49) கைது செய்து விசாரிக்கின்றனா்.