மழை பாதிப்பு பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி, ஆலத்தூா் வட்டாரத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழை மற்றும் புயலால் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணத் தொகையும், பயிா் காப்பீட்டுத் தொகையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். ஆனால், வேளாண்துறையினா் வேப்பந்தட்டை வட்டாரத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க, அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையறிந்த, ஆலத்தூா் வட்டாரத்திலுள்ள கொட்டரை, கூத்தூா், திம்மூா், கொளத்தூா், சிறுகன்பூா் உள்பட சுமாா் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மழையால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளப் பயிா்களுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வேப்பந்தட்டை வட்டாரத்தில் மட்டும் கணக்கெடுப்பு நடத்திய வேளாண்துறையினரின் செயலைக் கண்டித்தும், ஆலத்தூா் வட்டாரத்தில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களை பாா்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணமும், பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் அளித்து கலைந்துசென்றனா்.