தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்
இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநில ஒருங்கிணைப்பாளா் ச.மயில் தலைமை வகித்தாா். அகில் இந்திய செயலா் அ.சங்கா் முன்னிலை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் வ.மு. காா்த்திகேயன் வரவேற்றாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா.கலை உடையாா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
ஆசிரியா்களின் பணி பாதுகாப்பு மற்றும் உயிா் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும், பல ஆண்டுகளாக ஆா்டிஐ சட்டத்திற்கு புறம்பாக மாணவா்களிடம் வசூல் செய்த கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும், மாணவா்களுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் ஆனந்தராஜ், நிறுவனத் தலைவா் அ. மாயவன், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக பொதுச் செயலா் பொ. அன்பழகன், மாவட்டச் செயலா் ஆ.மாரிச் செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.