பிஜிடி கோப்பையை வழங்க கவாஸ்கர் அழைக்கப்படாதது ஏன்? கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்!
பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வழங்க அழைக்கப்படாதது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம் அளித்துள்ளது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது.
இதில் சுனில கவாஸ்கர் (காவஸ்கர்) கூறியதாவது:
பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்ற வெற்றியாளருக்கு கோப்பையை வழங்குமிடத்தில் இருப்பதை கண்டிப்பாக விரும்பியிருப்பேன். எல்லா விஷயங்களையும் கடந்து, இது பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. நான் மைதானத்தில்தான் இருந்தேன். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதால், நான் கோப்பையை வழங்க விரும்பமாட்டேன் என்றெல்லாம் கிடையாது. அவர்கள் நன்றாக விளையாடியதால், வெற்றி பெற்றார்கள். இந்தியராக இருப்பதால், ஆலன் பார்டருடன் இணைந்து கோப்பையை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றார்.
இந்த நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஊடக செய்தியாளர், “ஆம் ஒப்புக்கொள்கிறோம். கோப்பையை வழங்க இருவரும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸி. வென்றால் ஆலன் பார்டரும் இந்தியா வென்றால் கவாஸ்கரும் வழங்குவதாக ஏற்கனவே கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவெடுத்ததால் இந்தப் பிரச்னை இந்தியர்களிடையே சிறிது கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஜிடி தொடரை இந்தியா இழந்தாலும் பும்ரா தொடர் நாயகன் வென்று ஆறுதல் அளித்தார். காயம் காரணமாக அவரால் கடைசி இன்னிங்ஸில் பந்துவீச முடியவில்லை. அவர் இருந்தால் இன்னமும் சுவாரசியமாக சென்றிருக்குமென வர்ணனையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்தார்கள்.