விளக்கத்தை நீக்கிவிட்டு மீண்டும் பதிவிட்ட ஆளுநர்! என்ன மாற்றப்பட்டிருந்தது?
சென்னை: தமிழக சட்டப்பேரவையைப் புறக்கணித்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் முதலில் ஒரு விளக்கம் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டு அதனை நீக்கிவிட்டு மீண்டும் பதிவிடப்பட்டது.
அதாவது, தமிழக சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி, முதல்வர் மற்றும் அவைத் தலைவரிடம் வலியுறுத்தியிருந்தாகக் கூறப்படுகிறது. ஆனால், வழக்கம் போல, தமிழக பேரவை கூடியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனால், ஆளுநர் தன்னுடைய உரையை வாசிக்காமலேயே, ஆர்.என். ரவி, பேரவையிலிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் இது குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. முதலில் ஒரு பதிவு இடப்பட்டு, அதனை நீக்கிவிட்டு மீண்டும் பதிவிடப்பட்டது. முதலில் பதிவிடப்பட்ட விளக்கத்தில் நாடாளுமன்றத்தைப் பற்றிய ஒரு வாசகம் இடம்பெற்றிருந்தது. அதாவது, நாடாளுமன்றத்தில், முதலிலும், இறுதியிலும் தேசிய கீதம் பாடப்படும். குடியரசுத் தலைவர் உரை தொடக்கம் மற்றும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் எனும் வாசகம் இடம்பெற்றிருந்தது.
ஆனால், உடனடியாக அந்த விளக்கம் நீக்கப்பட்டு மீண்டும் விளக்கம் பதிவிடப்பட்டது.
அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதலமைச்சர் அவர்களிடமும் சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் என்று விளக்கம் கொடுத்து, இந்தப் பதிவானது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் டேக் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.