துப்பாக்கி சூட்டில் இளைஞர் படுகாயம்! 2 பேர் கைது!
தெற்கு தில்லியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவரை சுட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு தில்லியின் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த நசீர் கான் (வயது 22) என்பவரது குடும்பத்துக்கும் அப்பகுதியை சேர்ந்த ராகுல் (24) மற்றும் சுஹைல் (22) ஆகிய இருவருக்கும் நீண்டக்கால பகையிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜன.5) இரவு 8.30 மணியளவில் நசீரின் வீட்டின் அருகே வந்த இருவரும் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.
பின்னர், உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டதில் அவரது உயிர் காப்பாற்றப்பட்டு தற்போது அவர் நலமாக உள்ளார்.
இதையும் படிக்க:இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று!
முன்னதாக, அவர் மீது இந்த கொலைவெறி தாக்குதலை நடத்திய இருவரையும் அப்பகுதியினர் தாக்கியதில் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தகவல் அறிந்து அங்கு விரைந்த அம்மாநில காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அந்த இருவரும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் எனவும் அவர்கள் இருவரின் மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.