இலங்கை: கிலோ கணக்கில் தொடர்ந்து சிக்கும் தங்கம்; `பாக் நீரிணை’ பகுதியும் தங்கம் கடத்தலும்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல் வழியாக போதை பொருட்களான கஞ்சா, போதை மாத்திரைகள், வலிநிவாரணி மாத்திரைகள், பீடி பண்டல்கள், தங்க கட்டிகள் ஆகியன கள்ளத்தனமாக கடத்தி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந்திய கடல் பரப்பினை கண்காணிப்பதற்காக இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, சுங்கத்துறை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் க்யூ பிரிவு உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் உள்ளன. இதே போல் இலங்கை கடற்பகுதியில் இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல் படை என பல பிரிவுகள் இயங்கி வருகின்றன.
இரு நாடுகளை சேர்ந்த இத்தனை பாதுகாப்பு பிரிவுகளின் கண்காணிப்பினையும் மீறி கடல் வழியாக கடத்தல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு இணையாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படும் நிகழ்வுகள் அதிகரித்தபடியே உள்ளது. இத்தகைய கடத்தல் சம்பவங்களில் வெளிநாடுகளில் இருந்து விமானத்தின் கடத்தி வரப்படும் தங்கத்தினை விமான நிலையத்தில் இயங்கும் சுங்கத்துறை அவ்வப்போது பறிமுதல் செய்தாலும் தங்க கடத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதே போல் இலங்கையில் இருந்து கடல் வழியாக நடைபெறும் தங்க கடத்தல் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் சுங்க இலாகாவின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரகசிய தகவல்கள் மூலம் கண்டறிந்து கடத்தி வரப்படும் தங்கத்தை அவ்வப்போது கைபற்றி வருகின்றனர்.
கடந்த 2023 நவம்பர் மாத இறுதியில் இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 8 கிலோ தங்கத்தினை பாம்பன் பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைபற்றினர். ஆனால் அதனை கடத்தி வந்த கடத்தல்காரர்கள் தப்பிவிட்டனர். இதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் நடந்த கடத்தல் சம்பவத்தில் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வதற்காக டூவீலர் பவுச்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 7.70 கிலோ எடை கொண்ட தங்ககட்டிகள் சிக்கின.
இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்பாக மேலும் ஒரு கடத்தல் கும்பலை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை தலைமன்னார் பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான நிலையில் வந்த பிளாஸ்டிக் படகு ஒன்றை பிடித்து சோதனையிட்டனர். அந்த சோதனையில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலா 100 கிராம் எடை கொண்ட 242 தங்க கட்டிகள் சிக்கியது. இவற்றின் அப்போதைய இந்திய மதிப்பு சுமார் 7 கோடி ஆகும். இதனை தொடர்ந்து படகில் வந்த தலைமன்னாரை சேர்ந்த 3 பேர்களை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 3 செல்போன் மற்றும் பிளாஸ்டிக் படகினையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு கடந்த ஆண்டில் மட்டும் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு சுமார் 100 கிலோவிற்கும் அதிகமான தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்திலேயே இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட இருந்த சுமார் 11.300 கிலோ தங்ககட்டிகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பரப்பில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் படகு ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 11.300 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் சிக்கின. இதன் இந்திய மதிப்பு ரூ.7.45 கோடி. இந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த கல்பிட்டி பகுதியை சேர்ந்த இலங்கையை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதே போன்று தூத்துக்குடி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கோடி மதிப்பிலான களைக்கொல்லி பூச்சி மருந்தினை யாழ்ப்பானம் பகுதியில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரை கைது செய்த கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடும் பொருளாதார நெருக்கடியினால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட உணவு தேவைகளை சமாளிப்பதே அங்கு வாழும் மக்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனால் வெகுண்டெழுந்த மக்களால் இலங்கையில் ஆட்சி மாற்றமே நிகழந்தது. ஆன போதும் இலங்கையில் இருந்து தங்கம் கடத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கிலோ கணக்கில் கடத்தப்படும் தங்கம் எப்படி இலங்கைக்குள் வருகிறது என்பது குறித்து புலனாய்வுத்துறையினரிடம் பேசினோம். அவர்கள், ‘’பல்வேறு ஆண்டுகளாக இலங்கை கடத்தல் சம்பவங்களின் மையமாக இருந்து வருகிறது. இலங்கையை சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் இருந்து தங்க கட்டிகள் விமானங்கள் வழியாக கடத்தி வரப்படுகின்றன. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை போன்று இலங்கை விமான நிலையங்களில் சோதனை கெடுபிடிகள் அதிகம் இருப்பதில்லை. இதனை பயன்படுத்திக்கொள்ளும் கடத்தல்காரர்கள் தங்கத்தினை இலங்கைக்கு கடத்தி வருகின்றனர்.
இதே போல் இலங்கை சர்வதேச துறைமுகத்திற்கு பல நாடுகளின் கப்பல்கள் வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் கப்பல்கள் மூலமாகவும் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுகின்றன. இவ்வாறு இலங்கைக்குள் வரும் தங்க கட்டிகள் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்தப்படுகிறது. இலங்கையில் உள்நாட்டு போருக்கு முன்பு வரை தங்க கடத்தல் என்பது அரிதாகவே இருந்தது. அதன் பின் பின் பாக் நீரிணை பகுதி வழியாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தும் சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டன.
இந்த தங்க கடத்தலில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள் சர்வதேச கடத்தல் கும்பல்களுடன் கைகோர்த்துக் கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இலங்கை மற்றும் இந்திய மீனவர்களில் சிலரை இதற்கென பயன்படுத்தி இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தையும், இங்கிருந்து இலங்கைக்கு போதை பொருள் உள்ளிட்டவற்றையும் கடத்தி வருகின்றனர்.
சில நேரங்களில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு சிலரே கடத்தல் சம்பவம் குறித்த தகவல்களை பாதுகாப்பு துறையினரின் காதுகளுக்கு கசிய விட்டு பலனடைகின்றனர். இதனால் பாதுகப்பு படையினரிடம் அவ்வப்போது சிக்கிக்கொள்கின்றனர்.
இவை தவிர கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் சிலர் சிலர், கரைக்கு வந்து சேரும் கடத்தல் தங்கத்தை உரிய நபரிடம் சேர்க்காமல் தாங்களே அபகரித்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன. இது போன்ற நிகழ்வுகள் ‘திருடனுக்கு தேள் கொட்டிய கதை’ யாகத்தான் இருக்கிறது. ஆனாலும் தங்க கடத்தல் தொடர்ந்து நடந்து கொண்டேதான் உள்ளது’’ என்கின்றனர்.