TN Assembly: ஆளுநரின் விளக்கம், X-ல் நீக்கப்பட்ட பதிவுக்கும் - புதிய பதிவுக்கும் என்ன வித்தியாசம்?
2025-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழத்துக்குப் பிறகு தேசியக் கீதம் பாடப்படவில்லை என, ஆளுநர் ரவி சபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளியேறியதும் தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில்,``தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது மாண்புமிகு ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாராளுமன்றத்தில் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் சட்டப்பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு சபாநாயகருக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக அதற்கு மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.
அதற்கு அடுத்ததாக ஒரு பதிவு தமிழில் வெளியிடப்பட்டது. அதில், ``தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும், மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு பதிவுகளின் அடிப்படையில் கவனிதக்கான ``மாண்புமிகு ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாராளுமன்றத்தில் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது." என்ற வரிகள் நீக்கப்பட்டிருப்பது கவனம் பெறுகிறது.