வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு! விமான, ரயில் சேவை பாதிப்பு!
வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக விமான சேவையும் ரயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லி விமான நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில், 100 அடிக்கு அப்பால் உள்ள எதுவும் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டியது. சனிக்கிழமை (ஜன. 4) காலை விமான ஓடுபாதை முற்றிலும் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால், தில்லி விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தில்லியில் சனிக்கிழமை காலை 5.30 மணி நிலவரப்படி, 10.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக 250-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின; மேலும் சுமார் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கொல்கத்தா ரயில் நிலையத்திலும் 40 விமானங்கள் தாமதமானதுடன், 5 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. பனிமூட்டத்தால் விமான மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டதுடன் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தில்லி, நொய்டா, குருகிராம், லக்னௌ, ஆக்ரா, கர்னல், காஜியாபாத், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் உள்பட பல இடங்களில் சாலைகளின் தெரிவுநிலை குறைந்து வருவதால் வாகனங்கள் மிகக் குறைந்த வேகத்தில் இயங்கின.
பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பிகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களும் அடர்த்தியான மூடுபனியால் பாதிக்கப்பட்டுள்ளன.