கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
TN Assembly: "கடந்த ஆண்டே தெளிவுபடுத்தி இருக்கிறோம்" - ஆளுநர் வெளியேறியது குறித்து துரைமுருகன்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக ஆளுநர் ரவி இன்று காலை பேரவைக்கு வந்தார். ஆனால் திடீரென உரையை நிகழ்த்தாமல் அவையில் இருந்து வெளியேறினார். இது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தேசிய கீதம் முதலில் இசைக்கப்படாததால்தான் ஆளுநர் வெளியேறினார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளுநர் வெளியேற்றம் குறித்து அமைச்சர் துரைமுருகன் சட்ட பேரவையில் விளக்கமளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "பேரவையின் புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று சட்டம் உள்ளது. ஆளுநர் பதவிக்கு எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே கலைஞரின் கொள்கை. முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் சென்றிருக்கிறார்.
ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என பேரவைத் தலைவர் அப்பாவு, கடந்த ஆண்டே ஆளுநருக்கு கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறி இருக்கிறார்.
தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மிகுந்த மரியாதை கொண்டுள்ளது" என்று கூறியிருக்கிறார்.