கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
சட்டப்பேரவையில் நடந்தது என்ன? - அப்பாவு பேட்டி
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஏன் வெளியேறினார் என பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.
இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம்.
இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்றார்.
தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படடது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் ரவி திடீரென அவையில் இருந்து வெளியேறினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் வெளியேறிய விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அப்பாவு,
'அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி கேட்டு சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வந்திருந்தார்கள். அதிமுகவினர் கையில் பாதைகளுடன் வந்திருந்தார்கள். ஆளுநர் எழும்பும்போதுதான் மற்ற கட்சியினர் பதாகைகளைக் காட்டினார். பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் அவருக்கு எதிராகக் காட்டினார்களா எனத் தெரியவில்லை. அவர்களுக்கு பேசவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் அவர்கள் யாருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை.
ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் ஒரு கலவர நோக்கத்துடன் செய்ததால் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்களை வெளியேற்றினோம்.
அரசமைப்பு விதி 176 (1) இன்படி, ஆளுநர் உரை வாசிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆளுநர் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வாறு செய்திருக்கிறார். இதற்கு அவையில் தீர்மானம் நிறைவேற்றி கண்டனம் செய்திருக்கிறோம்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் மரபுப்படி நடைபெறுகிறது. இதுவரை எந்த ஆளுநரும் இப்படிச் செய்ததில்லை.
1995-ல் ஆளுநர் சென்னா ரெட்டி ஆளுநர் உரையை வாசிக்காதபோது அவரை திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். புதிய ஆளுநரை நியமிக்கும்போது அரசிடம் பரிந்துரை கேட்க வேண்டும் என்றும் கூறினார். பின்னர் 1996 பிப்ரவரியில் ஆளுநர் உரை நடந்தது.
பேரவைத் தலைவராகிய நான் சென்று ஆளுநருக்கு முறையாக அழைப்பு விடுத்தேன். அவர்களும் மகிழ்ச்சியாக உபசரித்தார்கள். அரசியலமைப்புப் படி ஆளுநருக்கு மரியாதை அளித்தோம்.
சட்டப்பேரவை மரபுப்படி, தமிழக கலாசாரப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்ச்சி நிறைவு பெறும்போது தேசிய கீதம் இசைக்கப்படும். தமிழ்நாட்டில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இப்படித்தான் நடக்கிறது. எனவே, சட்டப்பேரவை நிகழ்வுகளும் அவ்வாறே நடைபெறும். தமிழ்நாட்டு மரபுகளை மாற்ற முடியாது. ஆளுநர் வரும்போதே இங்கு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்வது?
இதே ஆளுநர் இருந்தால் அடுத்த ஆண்டும் இதே மாதிரிதான் நடைபெறும்' என்றார்.