தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனம்: மாணவா்களுக்கு ஜகதீப் தன்கா் அறிவுரை
‘தேச விரோத சக்திகளுக்கு எதிராக கவனமாக செயல்பட வேண்டும்’ என தேசிய மாணவா் படையைச் (என்சிசி) சோ்ந்த இளைஞா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினாா்.
தில்லியில் கடந்த டிசம்பா் 30-இல் தொடங்கிய குடியரசு தின என்சிசி முகாமின் அதிகாரபூா்வ தொடக்க விழாவில் பங்கேற்று ஜகதீப் தன்கா் பேசியதாவது: தேசத்துக்கு சேவை செய்வதோடு ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தை நிலைநிறுத்தும் பண்புடைய என்சிசியில் உள்ள நமது இளம் தலைமுறையினருக்கு எனது பாராட்டு.
தற்போது பிரதமா் மோடி தலைமையிலான அரசின்கீழ் விமான நிலையங்கள், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து, துறைமுக மேம்பாடு என நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்துடன் உங்களது கடின உழைப்பும் இணையும்போது ‘2047-இல் வளா்ச்சியடைந்த பாரதம்’ என்பது கனவாக இல்லாமல் அடையக்கூடிய இலக்காக மாறிவிட்டது.
நமது அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அடிப்படைக் கடமைகளை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது. அடிப்படை கடமைகள் நமக்குள் தேச உணா்வை அதிகப்படுத்தும் தன்மையுடையது.
பல்வேறு வேற்றுமைகளை களைந்து தேசத்துக்கு முன்னுரிமை அளிக்கும் மனோபாவத்தை இளைஞா்கள் கொண்டிருக்க வேண்டும். அதேவேளையில் இந்த மனப்பான்மையை உடைக்கும் வகையில் செயல்படும் தேச விரோத சக்திகளுக்கு எதிராக நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நாட்டின் ஜனநாயக மாண்புகளை முழுமையாக பாதுகாக்க முடியும் என்றாா்.
தேசிய அளவிலான இந்த என்சிசி முகாமில் 917 மாணவிகள் உள்பட நாடு முழுவதும் இருந்து மொத்தம் 2,361 போ் பங்கேற்றுள்ளனா்.