ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா!
ஐசிசியின் டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளராக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
டிசம்பர் மாதத்தில் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளில் பும்ரா 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடரின் முடிவில் அவர் 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது சராசரி 14.22 ஆக உள்ளது. தசைப் பிடிப்பின் காரணத்தினால் பும்ராவால் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச முடியவில்லை.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல; யுவராஜ் சிங் ஆதரவு!
பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணி தொடரை இழக்காமல் இருப்பதற்கு மிகுந்த உதவியாக இருந்தார்.
ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றுக் கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேன் பீட்டர்சன் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முழுவதும் பாட் கம்மின்ஸ் சிறப்பாக செயல்பட்டார். டிசம்பரில் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளில் அவர் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடிலெய்டில் அவரது அபார பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்த உதவியாக இருந்தது. மெல்போர்னில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட பாட் கம்மின்ஸ் 49 ரன்கள் மற்றும் 41 ரன்கள் முறையே எடுத்தார்.
இதையும் படிக்க: ஆஸி.யை வீழ்த்தும் வழி எங்களுக்குத் தெரியும்: ககிசோ ரபாடா
தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளரான டேன் பீட்டர்சன், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற டேன் பீட்டர்சனின் பங்களிப்பு மிகவும் உதவியாக இருந்தது.
ஜஸ்பிரித் பும்ரா, பாட் கம்மின்ஸ் மற்றும் டேன் பீட்டர்சன் இடையேயான இந்தப் போட்டியில் வெற்றி பெற்று யார் ஐசிசி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.