Adani - Sabareesan சந்திப்பு? ஒரேநாடு ஒரேதேர்தலுக்கு Kalaingar ஆதரவு? DMK தமிழன்...
தேசிய விவசாயிகள் தினம்... யார் இந்த சவுத்ரி சரண் சிங்; விவசாயிகளுக்கு செய்தது என்ன?
இந்தியாவில் இன்று (டிசம்பர் 23) தேசிய விவசாயிகள் தினம். நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட மறைந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளே தேசிய விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுவதற்குக் காரணமும் இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து வரலாறு பாடத்தில் முதுகலை பட்டம், சட்டப் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், மகாத்மா காந்தி மீதான ஈர்ப்பால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். ஒருகாலத்தில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸின் முகமாக இருந்த இவரே, வட இந்தியாவில் முதல்முறையாகக் காங்கிரஸ் இல்லாத ஆட்சியை நிறுவிய முதல் முதலமைச்சர் என்ற ஒரு நெடும் வரலாறு இவருக்கு இருக்கிறது.
1937-ல் தனது 34-வது வயதில் ஐக்கிய மாகாணங்களின் சட்டமன்றத்துக்கு சப்ராலி (பாக்பத்) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1938-ல் சட்டமன்றத்தில் விவசாய உற்பத்திக்கான சந்தை மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். இந்த மசோதா, வணிகர்களின் பேராசைக்கு எதிராக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு அமைந்திருந்தது. 1952-ல் உத்தரப்பிரதேச மாநிலத்தின் வருவாய் அமைச்சராக இருந்தபோது ஜமீன்தாரி முறையை ஒழித்து நிலச் சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டுவந்தார்.
1966-1967 வறட்சி காலகட்டத்தின்போது, விவசாயிகளுக்குச் சந்தை விலையை விட அதிக கொள்முதல் விலையை வழங்கினார். இவரின் இந்தச் செயல், விவசாய விளைபொருள்களுக்கு `குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)' கோரி விவசாயிகள் இன்று போராடுவதற்கு முன்னோடியாக இருக்கிறது. நாட்டின் விவசாயக் கொள்கைகளைச் சீரமைக்க மற்றும் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த இன்றும் இவரது கொள்கைகள் வழிவகுத்து வருகிறது. விவசாயிகள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான இவரின் இத்தகைய பங்களிப்பை நினைவுகூரும் வகையில்தான் 2001-ல், இவரது பிறந்தநாள் தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயிகள் வகிக்கும் முக்கிய பங்கை தேசிய விவசாயிகள் தினம் நினைவூட்டுகிறது. பெரிய விவசாய நாடாகத் திகழும் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேன்மை விவசாயிகளைச் சார்ந்துள்ளது. நியாயமான விலை நிர்ணயம், காலநிலை மாற்றம், நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது உட்பட விவசாயிகள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை இந்தத் தினம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அரசாங்கத் திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய விவசாயிகள் தினம் முதன்மையாகக் கொண்டாடப்படுகிறது.
விவசாயிகள் நலன் சார்ந்து இதுபோன்ற பல முன்னெடுப்புகளைச் செய்த சவுத்ரி சரண் சிங்குக்கு இந்தாண்டு தொடக்கத்தில் பாரத ரத்னா விருதும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...