விரைவில் சாம்பியன்ஸ் டிராபி; ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தான்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையும் படிக்க: அஸ்வினுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட இளம் ஆல்ரவுண்டர்!
முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்திலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, நேற்று (டிசம்பர் 22) ஜோஹன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை டக்வொர்த் லீவிஸ் முறையில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் செஞ்சூரியனில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தவுள்ள நிலையில், அந்த அணி தொடர்ச்சியாக 5-வது இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடர் வெற்றிகள் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பாகிஸ்தானின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.