தமிழ் வளா்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அமைச்சா் மா.சுப்பி...
பயிற்சி பிட்சுகளால் இந்திய அணி அதிருப்தி! -மெல்போர்ன் திடல் மேற்பார்வையாளர்
பயிற்சி பிட்சுகளால் இந்திய அணி அதிருப்தியடைந்துள்ளதாக மெல்போர்ன் திடல் மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக இந்திய அணியினரும், ஆஸ்திரேலிய அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் உள்ள மற்ற ஆடுகளங்களில் இருந்து மெல்போர்ன் பிட்ச்கள் மாறுபட்டுள்ளதாகவும், அதிவேக பௌன்ஸ் இருப்பதாகவும் இந்திய அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தப் பிட்சுகளில் இருக்கும் அதிக பௌன்ஸ்களால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த பயிற்சியில் முழங்காலில் காயமடைந்த ரோஹித் சர்மா திங்கள்கிழமை பயிற்சியில் ஈடுபடவில்லை.
இதுகுறித்து மெல்போர்ன் மைதானத்தில் பிட்ச் மேற்பார்வையார் மேட் பேஜ் கூறுகையில், “மெல்போர்ன் பயிற்சி பிட்சுகளால் இந்திய அணியினர் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர். இந்திய அணியினர் மூன்று மாதங்களுக்கு முன்னதாக, பயிற்சிக்கான அட்டவணை வழங்கியிருந்தனர். சரியான நேரத்தில் பிட்ச் பராமரிப்பு பணிகள் எதுவும் முடிவடையவில்லை. இருப்பினும் நாங்கள் மூன்று நாள்களில் பிட்ச் தயார் செய்துவிட்டோம். அதனாலேயே அவர்கள் புதிய ஆடுகளங்களில் பயிற்சி மேற்கொண்டனர்.
வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்
மெல்போர்ன் ஆடுகளம் காபா, பெர்த் போன்று பௌன்ஸ் இருக்காது. ஆனால், ஆடுகளத்தில் 6 மில்லி மீட்டர் அளவுக்கு புல் இருக்கிறது. இதனால், வேகப்பந்து வீச்சுக்கு நன்றாக இருக்கும். இருப்பினும், சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் பிட்சில் வெடிப்புகள் எதுவும் இருக்காது.
7 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் வெறும் ஃபிளாட்டான பிட்சுகளை வைத்திருந்தோம். ஆனால், இப்போது டெஸ்ட் போட்டிகளை சுவாரசியமாக்க அதிக புற்களை வளர்த்திருக்கிறோம். எதுவாயினும் பேட்ஸ்மேன்களுக்கு புதிய பந்தில் ரன்குவிப்பதற்கு நன்றாக இருக்கும்.
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக விளங்கும் மெல்போர்ன் மைதானத்தில் பேட்ஸ்மேன் நன்றாக விளையாடும் பட்சத்தில் அதிக ரன்குவிக்கலாம். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மைதானத்தின் திடலும் வித்தியாசமானவை. ஜஸ்பிரித் பும்ரா மெல்போர்ன் பிட்சைப் பார்த்து மிகவும் சந்தோசப் பட்டிருப்பார்.
ரவீந்திர ஜடேஜா வெளிநாடுகளில் ஒரு நல்ல சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டாக இருந்தாலும், இந்த மாதிரியான பிட்ச்களில் அவருக்கு அதிக வேலை இருக்காது” என்றார்.