Viduthalai 2: "மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்..." - தனுஷ் சொல்லியதென்ன?
பிப்.23-ல் இந்தியா- பாக். மோதல்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடுத்தாண்டு பிப்.23 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, லாகூர், கராச்சி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் ஏ பிரிவிலும், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டதால், இந்தியாவுக்கான போட்டிகள் பொதுவான மைதானங்களில் நடத்தப்படும் என்று ஐசிசியும் தெரிவித்தது. அதன்படி, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐக்கிய அமீரகத்தில் விளையாடவிருக்கின்றன.
இந்தத் தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் ரக்வி மற்றும் ஐக்கிய அமீரக கிரிக்கெட் வாரியத் தலைவருமான சேக் நயன் அல் முபாரக் இடையேயான பேச்சுவார்த்தை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பிப்ரவரி 23 ஆம் தேதி துபையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியும், பிப்ரவரி 20-ல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியும், மார்ச் 2-ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துப் போட்டிகளும் துபை மைதானத்தில் நடைபெறவிருக்கின்றன.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் பிப்ரவரி 19-ல் கராச்சியில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும், பிப்ரவரி 27 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் விளையாடவிருக்கிறது.
அரையிறுதி போட்டிகள் மார்ச் 4, 5 ஆம் தேதிகளிலும், இறுதிப்போட்டி மார்ச் 9 ஆம் தேதி கராச்சி மைதானத்திலும் நடைபெறவிருக்கிறது. ஒருவேளை இந்திய அணி அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறும் பட்சத்தில் போட்டிகள் துபையில் நடைத்தப்படவுள்ளன.