அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: தேவேந்திரகுல வேளாளா் சங்கத்தினா் 342 போ் கைது
டீன் ஏஜ், கண்ணாடி முன் நின்றதில் வந்த மாற்றம்... `பல்'லேகா -3 | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
முன் கதைச்சுருக்கம்:
நான் பல்வலியோடு பல் மருத்துவமனையில் அமர்ந்திருக்கிறேன். அங்கிருந்த நர்ஸுக்கு மானசீகமாக மெல்லிசை எனப்பெயர் வைத்து டாக்டருக்காகக் காத்திருக்கிறேன்.
தொடர்ச்சி…
நான் கடவாயை அழுத்திக்கொண்டிருப்பதை மெல்லிசைப் பார்த்தார். இது மெல்லிசைக்கு மன அழுத்தம் தந்ததோ? என்னவோ?
நான் எழுந்து நிற்கும் முன்னே.”வாயைத் திறங்க”. என்றார். இசை இசைவினைக்கூட எதிர்நோக்காமல் மீண்டும் பஞ்சினை வாயில் திணித்தார்.
”இந்த தெத்துப்பல்லுக்கு க்ளிப் போடலாமே!” எனக் கேட்டார்.
பஞ்சு இருந்ததால் பேசாமல் இல்லை, பஞ்சு இல்லாமல் இருந்திருந்தாலும் மௌனமாகவே இருந்திருப்பேன். நான் மறந்து போயிருந்த தெத்துப்பல்லை ஞாபகத்திற்குக் கொண்டு வந்தார். கூடவே கிருஷ்ணதாஸும் ஞாபகத்திற்கு வந்தான்.
அவனுக்கும் இரண்டு தெத்துப்பற்கள்.
கல்லூரியில் வேதியியல் இரண்டாம் வருடம் படிக்கும் போது தான் கிருஷ்ணதாஸ் நெருக்கமானான். நான் சமன்பாடுகளில் மூழ்கும் போது அவன் அழுத்தவிதிகளை அனாயாசமாக அள்ளிவிடுவான்.
நல்ல பாடுவான். அப்போது அவன் கழுத்தில் நரிப்பல் ஆடிக்கொண்டே சிரிக்கும். அவன் பாடும் போது குரல் இனிமையாக இருந்தாலும் தெத்துபற்களின் வழியாகக் காற்று அகமும் புறமும் வீசுவதில் ராகத்தில் சிறிது சிறிதாகப் பிசிறு ஏறும். உச்சரிப்பிலும் சுத்தம் இருக்காது.
அது அவனை மனதளவில் தொந்தரவு செய்திருக்க வேண்டும். நிற்கும் பைக் கண்ணாடிகளில் நாங்கள் முகம் பார்க்கும் போது வெறுப்பை உமிழ்வான். அது அவ்வப்போது வகுப்புகளில் வெளிப்படும்.
ஆங்கில இலக்கிய வகுப்பில்” யூதாஸ் முப்பது காசுக்கு ஆசைப்பட்டு ஏசுவைக்காட்டிக்கொடுத்தான்” என எல்லோரும் பதில் சொன்ன போது. ” யூதாஸ் ஏசுவைக்காட்டிக்கொடுக்க வில்லை!” என மறுத்துப்பேசியவன்.
” யூ…தாஸ்”
எனப் பேராசிரியர் இழுத்ததும் எல்லோரும் சிரித்தார்கள்.
”ஏசு யூதாஸுக்கு அளித்த கட்டளை”
என இதைச் சொல்லும் போது அவன் பற்களில் வார்த்தைகள் சிக்கித் தடுமாறி வெளியே வந்தன. அது மேலும் வகுப்பில் சிரிப்பலையை உண்டாக்கியது.
நீ எதாவது பேச வேண்டுமென்பதற்காகப் பேசுகிறாய்… உட்கார்.
ஏன் சார்?
“உனக்கும் யூதாஸ்க்கும் அங்கீகாரம் முக்கியம்”
” எனக்குப்புரியல சார்” என அடுத்த அவதாரத்தில் எழுந்து நின்றான்.
ஏன்?
”நான் கண்ணாடியே பார்ப்பதில்லை சார்”
உண்மையாகவா தாஸ்?
எஸ் சார்…
அவன் மட்டுமல்ல, நாங்களும் எதிர்பார்த்தது பாராட்டு தான்.
ஆனால்
”சாரி…மை டியர் தாஸ்” என்பதோடு நிறுத்திக்கொண்டார்.
பிறகு ஒரு நாள் விளக்கினார். உலக இயல்பிலிருந்து மாறுவது பெருமை அல்ல. அது ஒரு மனநோய். டீன் ஏஜ்ஜில் கண்ணாடிப் பார்க்க விரும்பாதவன், மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டியிருக்கும் என்பதாக அமைந்தது அதன் சாரம்சம்.
அடுத்த சில நாள்களுக்குள் பல்லுக்கு க்ளிப் போட்டு வந்தான். நண்பர்களில் அவன் தான் முதலில் பல்லுக்குக் கம்பி கட்டியவன். ஒரு மாதத்தில் பிசிறில்லாமல் பாட முடிந்தது. நரிப்பல் தாயத்து காணாமல் போயிருந்தது. அழகாகியிருந்தான்.
பால்யத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் முகக்கண்ணாடி தான் முடிவு செய்கிறது. கண்ணாடி முன் தனக்குத்தானே பேசி சிரித்துக்கொள்ள ஆரம்பிப்பது தான் பால்யம். கண்ணாடி முன் தன்னையே திட்டித்தீர்ப்பது தான் பால்யத்தின் முடிவு.
அவன் பற்களை முன் உதாரணமாக வைத்துத் தான் எனது மேல் முன் பல்லை நகர்த்தி பின்னால் தள்ளலாம் என அப்பாவிடம் சொன்னேன். ”பல்லைக்கழற்றிடுவேன்” என்ற ஒற்றை வார்த்தையில் தான் இன்னும் அது முன்னின்று கொண்டிருக்கிறது. அது என் அடையாளமாக்கப்பட்டது.
அந்தப் பல்லுக்கு க்ளிப் போடுவதா?
இந்த முறை ”சிடுசிடு” முகத்தை வைக்காமல் சிரித்துக்கொண்டே மெல்லிசை கேட்டார். அவரின் பற்கள் பளிச் என்றிருந்தன, இந்த ப்ளிச் என்ற ஒரு வார்த்தைப்பெற ஒர் அரை யுகமே போராடியிருக்கிறேன்.
எனது முதல் முயற்சி அடுப்புக்கரியில் ஆரம்பித்தது. அது சாம்பல் வரை நீண்டது.
ஒரு சமயம் பக்கத்து வீட்டு ராசாத்தி அக்கா ஓடக்கல் போட்டு பல் துலக்கினாள். பிறகு அது மசக்கை இருப்பவர்களுக்கான பழக்கம் என்பதில் வெட்கமானது. இப்படியான பல்வேறு வியூகங்கள்.
ஒவ்வொரு முறையும் கண்ணாடி முன் நிற்கும் போது அனைத்து வியூகங்களும் பல்லிளித்தன. அவை ஒரு நாளும் தனது மஞ்சளிலிருந்து வெளியே வந்ததில்லை.
பற்பசைக்கு மாறும் வரை இப்படியான கவனச்சிதறல்கள் வந்ததே இல்லை, மனம் ஒட்டிக்கொள்வதில்லை.
மெல்லிசையிடம் கேட்கலாமா? மூன்றாவது டோக்கன். இன்னும் இரண்டு பேர் யாராக இருக்கும்? வேண்டாம். இரண்டு பேர் வரவில்லையென்றால் முதல் ஆளாக உள்ளே போகலாம் என்ற நப்பாசை வேறு கிச்சுகிச்சு மூட்டியது.
பல் வீக் என்பது பல்வீக்கமானதா? ஆங்கிலமா, தமிழா என்பதல்ல இப்போதைய பிரச்னை. பல் வலி வந்தால் எதுவும் தெளிவாகத்தெரியாது. வலியுடன் வரும் போது GOD IS HERE என மங்கலாக வாசித்த வாக்கியம் வலி குறைந்தவுடன் GOD IS NO WHERE என மாறுகிறது.. இப்படியான மனத்தின் லீலைகளை வரையறுக்கவே முடியாது.
பல்வலிக்கு உடனே மருத்துவரைப் பார்க்கும் துணிவு யாருக்கும் வருவதே இல்லை. அந்த நேரத்தில் தனது ஆதி, குரங்கு என்பதை நியாயப்படுத்துகிறான். குரங்கு தன்னுடைய காயங்களுக்குத் தானே மருத்துவம் செய்து கொள்ளும். அதுபோலவே பல்வலிக்கு மாதக்கணக்கில் பலபேரிடம் பண்டிதம் தேடி சல்லாபிக்கிறான். நானும் விதிவிலக்கல்ல, கிராம்பு வைத்து கொஞ்சம் நேரம் எச்சில் வழிய அங்குமிங்கும் அலைந்தேன். ஏகே 47 ஐ பார்த்தது போலப் பல் வலி ஒளிந்து கொண்டு பூச்சாண்டி காட்டியது.
மெல்லிசை கடிகாரத்தைப் பார்த்தார். அந்தக் கடிகாரத்தை நானும் பார்த்தேன். அது ரோஸ் கலரில் எடுப்பாக தெரிந்தது.
இது போலக் கடிகாரம் நானும் கட்டியிருக்கிறேன். ஆனால் அது ஜவ்வு மிட்டாய். நீளமான மூங்கில், உச்சத்தில் அழகிய மிடி அணிந்த மொம்மை. சலங்கையொலியில் நடனமாடி நம்மை கைதட்டி அழைக்கும். கும்பலாகப் பின்தொடர்ந்து ஓடுவோம். காசுக்கேற்ற பணியாரம், பைசாவுக்கேற்பக் கடிகாரம். நானெல்லாம் பத்துப் பைசாவுக்குக் கடிகாரம் வாங்கி கட்டியிருக்கிறேன். பல வண்ண ஜவ்வுமிட்டாயை இழுத்து கடிகாரம் செய்து கையில் கட்டிவிடுவார்.
ஒரு தடவை கீதாவுக்கு கடிகாரம் கட்டிவிட்டார். அவள் துள்ளிக் குதித்துப் பரவசமடையும் முன் அவளுக்கு மீசையும் வைத்தார். அவள் வெட்கப்பட்டாள், முகம் சிவந்தாள், கன்னம் இன்னொரு ஜவ்வு மிட்டாயானது. அவளின் பிளிக்குக்கு பஞ்சமே இருக்காது. அந்தக் கடிகாரம் கட்டிக்கொண்டால் எங்களுக்கு நேரம் போவதேத் தெரியாது. அதனை உடனே சாப்பிடாமல், தெரு முழுக்கச் சுற்றி அணு அணுவாக சப்பிச் சாப்பிடுவோம்.
மெல்லிசை கடிகாரத்தைப் பார்த்தும் எதோ முணுமுணுப்பது போலத் தெரிந்தது. தூங்கி வழிவதும் கவலையும் முகத்தில் தெரிந்தது. என்ன வருத்தமோ?
இந்தக் காட்சி எனக்கு குறுந்தொகைப்பாடலை ஞாபகப்படுத்தியது.
என்கண் துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தி என்
நெஞ்சு புண்ணுற்ற விழுமத்தானே (குறுந்தொகை -261)
நாழிகைக் கணக்கர் தூங்காமலிருந்து இரவில் நேரத்தைக் கணித்துச் சொல்லிக் கொண்டிருப்பார். அவர்களைப் போல நானும் துயிலாது இருந்தேன். ஏனெனில் என் நெஞ்சுக்குள் குவிந்த வருத்தங்கள் அப்படி என்கிறார் தலைவி. மொபைல் நோண்டிக்கொண்டே தூங்காது இருந்தேன் எனச்சொல்ல வருகிறாரோ என்னவோ?. அது போல மெல்லிசை தூங்காமல் காத்திருக்கிறாரோ? யாரவன்?.
ஆனாலும் தொடர்ந்து வரும் அழைப்புகளைக் கவனித்துத் தான் வந்தார். வரும் அழைப்புகளுக்கு ”டாக்டர் வந்துவிடுவார் வாங்க” என்ற பதிலையே திரும்பத்திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்.
பெரும்பாலான சமயங்களிலும் குரலில் கோபமும் சிலசமயம் மட்டுமே கருணை கைகூடின. டாக்டர் எப்பவருவார்? என யாரும் எதிர்க்கேள்வி கேட்காத அளவுக்கு நுண்ணரசியல் குரலில் ஒளிந்திருந்தது. அது தான் நானும் டாக்டர் எப்ப வருவார்? எனக்கேட்கத் தயங்கி நின்றதற்குக் காரணம். ஆனால் ஒவ்வொரு முறையையும் வரப்பெற்ற அழைப்பின் விபரத்தினையும் பெயரையும் பதிவு செய்யத் தவறவில்லை.
அவர் பேனாவை அந்த டைரிக்குள் வைப்பதும் பிறகு அதை எடுத்து தலையில் குத்திச் சொறிவதுமாக இருந்தார்.
அது ரெனால்ஸ் பால்பெயிண்ட்.
அதன் அழகியல் வடிவம் ஆகச்சிறந்த ஆகிருதியாகி அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தது. சிலசமயம் அதீதக் கற்பனையில் கீதா கொடுத்த ரெனால்ஸ் பால்பாயிண்ட் பேனாவால் பல்லைக்குத்திக்கொண்டு இருந்திருக்கிறேன். அப்போதில்லாத பல் வலி இப்போது எப்படி வந்ததோ?
பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் அது நிகழ்ந்தது. கீதாவும் நானும் வெவ்வேறு குரூப். அவள் பெரியப்பா வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருந்தாள். அவரவர் வகுப்பில் முதலிடம் என்பதால் இருவரும் கவனம் பெற்றிருந்தோம். சொல்லி வைத்தாற்போல, காலாண்டுத்தேர்வில் இருவரும் முதலிடம்.
நான் அதை மனப்பாடம் செய்வதோடு சரி. எனது மதிப்பெண்களில் மதி,பெண் என அவளாக இருக்கையில் சரியாக டிசம்பரில் அப்பாவுக்குப் பணி மாறுதல் வந்தது.
அப்பா டிசம்பர் மாதமே எங்களை விட்டுவிட்டு புதிய பணியிடம் போய்விட்டார். அந்த டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை நான் அப்பாவிடம் சென்று செலவுக்குப் பணம் வாங்கி வருவேன். அப்போதெல்லாம் கீதா ஊர் வழியாகவே பேருந்து செல்லும். அப்போதெல்லாம் சொல்லி வைத்து கை காட்டுவாள்.
பதினொன்றாம் வகுப்பு முடிந்தவுடன் 12 வகுப்பிற்கு அப்பா இருக்கும் இடத்திற்குக் குடி மாறினோம். கடைசியாக லாரியில் தான் குடிபெயர்ந்தோம். ஊரே கூடி அழுது வழியனுப்பினார்கள். ஏழுவருடங்களாக வாழ்ந்த அந்த ஊரை விட்டுப் பிரிவதை விட பள்ளியை பிரிவது வேதனையின் உச்சம்.
விடுமுறை என்பதால் ஸ்பரிசங்களின் பரிதவிப்போ, விழியோர ஈரங்களோ, பிரிவின் ஆர்ப்பாட்டமோ, முத்தழகோ ஏதுமில்லாமல் சின்னதொரு டைரியும், ரெனால்ட்ஸ் பேனாவும் நினைவுப் பரிசாக கொடுத்து அனுப்பியிருந்தாள். நினைவையும் தான் பரிசாகக் கொடுத்தாள். வீட்டில் அழுததாக செவிவழி செய்தியும் வந்தது. இப்படி நட்பில் ஆரம்பித்து அழுகையில் முடிவது நட்பு ஒன்று தான்.
லாரி குன்னூர் கோடேரியை தாண்டும் போது கோடாரி நெஞ்சில் பாய்வது போல இருந்தது. கோடேரி அவளின் பெரியப்பா ஊர். அன்றைக்கு அவள் கைகாட்டவில்லை.
பேருந்துக்குப் பதிலாக லாரி வருமென அவள் அறிவாளா? என்றாவது ஒரு நாள் அந்த வழியாகப் போகும் போது தானாக கை ஆட்டுவேன். அவள் எங்காவது நின்றுகொண்டு எனக்கு கை அசைத்துக் கொண்டிருப்பாள்.
எனக்கு எந்த டைரியைப்பார்த்தாலும் அந்த டைரி நினைவு வரும்! வந்தது. அந்த டைரியை எட்டிப்பார்த்தேன். டிசம்பர் மாதம் என்பதால் நிறைமாத கர்ப்பிணி போல நாள்களை எண்ணிக்கொண்டிருந்தது.
டிசம்பர் தொடங்கி பதினைந்து நாள்களாகியும் இன்னும் யாரும் டைரியோ, காலண்டரோ இலவசமாகத் தரவில்லை. அந்தளவுக்குத் தான் நம் பழக்கவழக்கம் இருக்கிறது. விலை கொடுத்து டைரி வாங்குமளவுக்கு வசதி இல்லாமல் இல்லை, ஆனால் யாராவது பரிசாகக் கொடுத்தால் ஒரு சந்தோசம் தான்.
ஒவ்வொரு வருடமும் டைரி எழுத வேண்டுமென்ற நப்பாசை. இதுவும் புத்தாண்டிலிருந்து வாக்கிங் போகவேண்டுமென்ற சபதம் போல ஓரிரு வாரங்களில் சப்பென்று முடிவுக்கு வந்து விடுகிறது. ஆனால், மீண்டும் மீண்டும் டைரி எழுத ஆசைப்பட வேண்டுமென்பதற்காகவே மெல்லிசைகள் வந்துவிடுகிறார்கள்.
-தொடரும்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...