அம்பேத்கா் குறித்த பேச்சு: உள்துறை அமைச்சா் அமித் ஷா ராஜினாமா கோரி டிச. 30 இல் ...
Viduthalai 2: ``12 வருட காத்திருப்பு, 15 வருட போராட்டம்! இதுக்கு கிடைச்ச பலன் விடுதலை!'' - ஜெய்வந்த்
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `விடுதலை பாகம் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் இண்டர்வெல் காட்சியில் வாத்தியார் பண்ணையார்களில் ஒருவரை வெட்டிக் கொல்வார். அந்த காட்சியை `பொறுத்தது போதும்' பாடல் மெருக்கேற்றியது. அந்த இண்டர்வெல் காட்சியில் பண்ணையாராக நடித்தவர் நடிகர் ஜெய்வந்த். 15 வருடமாக சினிமாவில் நிலையான இடத்திற்காக போராடி வந்த ஜெய்வந்துக்கு இந்த திரைப்படம் ஒரு `Breakthrough' மொமென்ட்டாக அமைந்திருக்கிறது. `விடுதலை 2' தொடர்பாக கேள்விகளை முன் வைத்தோம்.
நெகிழ்ச்சியுடன் பேச தொடங்கிய அவர், ``இது 15 வருட கனவுனுதான் சொல்லணும். என்னுடைய முதல் திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தது. வெற்றி சார் இந்த வாய்ப்பை கொடுத்தது ஒரு ஆசீர்வாதமாக பார்க்கிறேன். நான் இதுக்கு முன்னாடி மூன்று திரைப்படங்கள் நடிச்சிட்டேன். ஆனால், என்னை ஒரு நடிகனாக அடையாளப்படுத்தின திரைப்படம் `விடுதலை 2'தான். இதுவுமே எனக்கு கிடைச்ச விடுதலை. இனி எனக்கு சினிமாவுல நல்ல வாய்ப்புகள் வரும்னு எதிர்பார்க்கிறேன். வெற்றி மாறன் சார் ஒரு பல்கலைகழகம் மாதிரிதான்.
அந்தளவுக்கு பல விஷயங்களை கத்துகிட்டேன். வெற்றி மாறன் சார்கிட்ட வேலை பார்க்கிறது ஒரு கஷ்டமான விஷயம். அதுல ஸ்டண்ட் பீட்டர் ஹெயின் மாஸ்டர் பண்ணினார். ஒரு வழியாக போட்டு முறுக்கி எடுத்துட்டாரு. இன்டர்வெல் காட்சியில விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரம் என்னுடைய கழுத்தை நெருக்குவார். அந்த காட்சியில மூச்சுவிட சொன்னாங்க. அப்போ சரியாக மூச்சு விடலைனு அதுக்காக பல டேக் வாங்கினேன். வெற்றி மாறன் சார் அந்த காட்சியை பண்ணி காட்டினதுக்குப் பிறகுதான் நான் சரியாக பண்ணினேன்.
அந்தளவுக்கு மூச்சு விடுறதுலகூட வெற்றி சார் நுணுக்கத்தை எதிர்பார்ப்பாரு." என்றவருக்கு `விடுதலை' திரைப்படம் எவ்வளவு ஸ்பெஷல் என விளக்க தொடங்கினார். அவர், `` சரியாக 13 வருஷத்துக்கு முன்னாடி வெற்றி மாறன் சார்கிட்ட ஒரு நண்பர் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்கிட்ட வாய்ப்பு கேட்டுட்டு இருந்தேன். வெற்றி சார் எப்போதும் `சொல்றேன்'னுதான் பதில் கொடுப்பார். 13 வருஷ காத்திருப்பு இப்போதான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. சொல்லப்போனால், இந்த வாய்ப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. `விடுதலை' படம் ஷூட்டிங் நடந்துட்டு இருக்குனு தெரிஞ்சதும் `சரி வாடிவாசல்' திரைப்படத்துல ஒரு வாய்ப்பு கேட்போம்னு அமைதியாக இருந்தேன். திடீர்னு இந்த வாய்ப்பு கிடைச்சது. 13 வருட காத்திருப்பு, 15 வருட போராட்டத்துக்கு கிடைச்ச பலனாகதான் நான் இந்த வாய்ப்பை பார்க்கிறேன்." என்றார்.
`` இண்டர்வெல் ஆக்ஷன் காட்சி தயாராகிட்ட இருந்த சமயம் அது. வெற்றி சார் என்கிட்ட `தயாரா, ஸ்டண்ட் காட்சிகள் பண்ணலாமா'னு கேட்டாரு. அதன் பிறகு பீட்டர் ஹெயின் மாஸ்டர் ரிஹர்சல் பண்ணீட்டு இருந்தார். நான் சும்மா அவர் இருக்கிற பக்கத்துக்கு வேடிக்கை பார்க்கப் போனேன். நான்தான் அந்த காட்சியில நடிக்கப் போறேன்னு தெரிஞ்சுகிட்டு ரிஹர்சல் பண்றதுக்கு கூப்பிட்டார். நானும் போனேன்.
தொடர்ந்து 2 மணி நேரம் ரிஹர்சல் பண்ணினதுனால என்னால முடியல. அதை பண்ணி முடிச்சதும் நான் படுத்துட்டேன். இந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்டு வெற்றி சார், `எல்லாம் ஓகேவா...ஒரு இ.சி.ஜி எடுத்துக்கோங்க'னு சொல்லி அனுப்பினார். அதன் பிறகுதான் அந்த ஆக்ஷன் காட்சிகள் நடிக்கவிட்டாங்க. இத்தனை வருஷத்துல ஒரு முக்கியமான விஷயத்தை நான் கத்துகிட்டேன். எந்த நேரத்திலும் துவண்டு போய்விடக்கூடாதுங்கிறதுதான் நான் கத்துகிட்ட விஷயம். அந்த விஷயத்தை நினைச்சு நான் என்னை தயார்படுத்திக்கிட்டே இருந்தேன்.
ஒரு சமயத்துல இந்த `விடுதலை' வாய்ப்பு எனக்கு கிடைச்சது. இதுமட்டுமில்ல, இந்த படத்தின் மூலமாக பல விஷயங்களை கத்துகிட்டேன். அப்படிதான் விஜய் சேதுபதி சார்கிட்ட மற்ற நடிகர்களை எப்படி மதிக்கணும்ங்கிற விஷயத்தை கத்துகிட்டேன். முக்கியமான, வெற்றி மாறன் சார் மூலமாக என்னுடைய தன்னம்பிக்கை அதிகமாகுச்சு. நடிகராகவும் அவர்கிட்ட போனதுக்குப் பிறகு புதிய உத்வேகம் கிடைச்சிருக்கு." எனக் கூறி முடித்துக் கொண்டார்.