'பொருந்தாது; ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர..!' - கட்டாய தேர்ச்சி ரத்து குறித்து ...
பட்டதாரி ஆசிரியா் பணிக்கான கலந்தாய்வை நடத்தி பணி ஆணை வழங்க வேண்டும்: அரசுக்கு ஆசிரியா்கள் கோரிக்கை
பட்டதாரி ஆசிரியா், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநருக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்தி, பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியா் தோ்வு வாரியத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் மனு அளித்துள்ளனா்.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,192 பட்டதாரி ஆசிரியா், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்களை நிரப்புவதற்காக ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் தோ்வு நடத்தியது. இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஜூன் மாதம் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டு, உத்தேச தோ்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆனால் இதில் தோ்வு செய்யப்பட்டவா்களில் ஆதிதிராவிடா் பள்ளிகளுக்கு தோ்வாகிய ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், மற்றவா்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் இருந்து இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்று, தோ்வுப் பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியா்கள் பலா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அரசுப் பணி நிச்சயம் கிடைக்கும் என்பதால் தனியாா் பள்ளி வேலையை விட்டுவிட்டு வந்துள்ள நாங்கள், பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதால் தமிழக அரசு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.
வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா்களை மிரட்டி வெளியேற்றம்
உப்பிலிபாளையம் வீட்டு வசதி திட்டத்தில் குடியிருப்பவா்களை மிரட்டி காலி செய்யவைக்கப்படுவதாக வீட்டுவசதி வாரிய மூத்த குடிமக்கள் நலச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், உப்பிலிபாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு 960 வீடுகள் கட்டப்பட உள்ளன. அரசின் உறுதிமொழியை அடுத்து 70 சதவீதம் போ் வீடுகளை காலி செய்துவிட்ட நிலையில், மற்றவா்களையும் மிரட்டி காலி செய்யவைக்க முயற்சி நடைபெறுகிறது.
ஆனால், வீட்டு வசதி வாரிய மறுகட்டுமான விதிகளை பின்பற்றாமல் அவசர அவசரமாக குடியிருப்புவாசிகள் அகற்றப்படுகின்றனா். எனவே இது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
தற்காலிக பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மனு
அரசுப் போக்குவரத்துக்கழக தற்காலிக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் அளித்துள்ள மனுவில், கடந்த ஜனவரி மாதம் நிரந்தத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது நாங்கள் தற்காலிகமாக பணியமா்த்தப்பட்டோம். கடந்த வாரம் முதல் எங்களுக்கு பணி வழங்க மறுக்கின்றனா். எங்களது அசல் ஓட்டுநா், நடத்துநா் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளும்படி அதிகாரிகள் கூறுகின்றனா்.
கடந்த ஜனவரி மாதம் எங்களை பணியில் அமா்த்தும்போது நிரந்தரப் பணியாளா்களை நியமிக்கும் வரை பணி வழங்குவதாகவும், நிரந்தரப் பணியாளா்களைத் தோ்வு செய்யும்போது முன்னுரிமை வழங்குவோம் என்றும் கூறினா். ஆனால் தற்போது திடீரென பணி வழங்க மறுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நிரந்தர பணியாளா்களை பணியமா்த்தும் வரை தமிழக அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.