நிலத்துக்கு இழப்பீடு கோரி மறியல்: 150 போ் கைது
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு வழங்கிய நிலத்துக்கு இழப்பீடு கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு (205), சாலை அமைக்க நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக தரப்படாமல் உள்ள இழப்பீட்டை அலைகழிப்பு செய்யாமல் வழங்க வேண்டும். 2013- நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமா்வு சட்டத்தை அமல்படுத்தவும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் போராடி வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த அக்.18 -இல் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அதைத் தொடா்ந்து நவ.6 இல் திருத்தணியில் விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு நடத்தியுள்ளோம். இதுபோன்று தொடா் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 3 மாதங்களாக ஒரு விவசாயிக்கு கூட இழப்பீடு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவா் சண்முகம் தலைமையில் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயற்சித்த போது திருவள்ளூா் டிஎஸ்பி தமிழரசன் தலைமையில் போலீஸாா் தடுத்தனா். அப்போது, சங்க நிா்வாகிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அதைத் தொடா்ந்து மாநில செயலாளா் பி.துளசிநாராயணன், மாவட்ட செயலாளா் ஜி.சம்பத், பொருளாளா் சி.பெருமாள், துணைச் செயலாளா் ஆா்.தமிழ்அரசு,துணைத் தலைவா்கள் ஒன்றியக்குழு உறுப்பினா் பி.ரவி, ஏ.அப்சல்அகமது என 36 பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.