டங்ஸ்டன் சுரங்கத்து வலுத்த எதிர்ப்புகள்... இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!
மதுரையில் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்ட நாள்முதல், இதற்கெதிராக அப்பகுதி மக்கள் தொடங்கி மாநில ஆட்சியாளர்கள் வரை அனைத்து தரப்பிலிருந்தும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
மதுரை தொகுதி கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், ``வரலாறு முழுக்க தனது மேனியில் வரலாற்றுச் சின்னங்களை ஏந்தியிருக்கும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கின்ற ஒன்றிய அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும். கீழடியில் 10 அடி குழி தோண்ட அனுமதி கொடுக்காத ஒன்றிய அரசு, இன்று தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டியில் பல நூறு கி.மீ சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்கிறது என்றால், இது தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் ஒருசேர அழிக்கின்ற முயற்சி." என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார்.
அதேபோல், முதலமைச்சர் ஸ்டாலின், ``மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுவதோடு, சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்துங்கள்." என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதோடு, ``மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியும் வழங்கக் கூடாது." என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்யுமாறு, இந்திய புவியியல் ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதில், பல்லுயிர் பாரம்பர்ய தலம் உள்ள இடத்தில் சுரங்கம் அமையவுள்ளதாக கருத்துருக்கள் வந்திருப்பதாகவும், அதனால் பல்லுயிர் பகுதிகளைத் தவிர்த்துவிட்டு மீதமுள்ள பகுதிகளில் சுரங்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...