ஊழலற்ற மக்களாட்சி தேவை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்
``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட திமுக விரும்புவதில் தவறில்லை'' - அமைச்சர் முத்துசாமி
காங்கிரஸ் மூத்த தலைரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, 2023- ஜனவரி 4-ல் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து 2023 பிப்ரவரியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மகன் நின்ற இடத்தில் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நாடு முழுவதும் திருமங்கலம் பார்முலாவை விட ஈரோடு கிழக்குத் தொகுதி பார்முலா பரபரப்பாக பேசப்பட்டது. இரண்டு ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் கடந்த 14-ஆம் தேதி உயிரிழந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என கூட்டணிக் கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே போட்டா போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், தந்தை பெரியார் நினைவு நாளொயொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபின், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் இருக்கும். அதுபோல ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டால் அதில் போட்டியிட வேண்டுமென திமுக-வும் விரும்புவதில் எந்த தவறும் இல்லை. இருந்தாலும், கட்சித் தொண்டர்களின் கருத்தை ஈரோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தின்போது முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள். கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முதல்வர்தான் முடிவை எடுப்பார். அது எந்த முடிவாக இருந்தாலும் அதற்காக நாங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறோம்.
வடமாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் இயங்கும் பொது நிறுவனங்கள் எடுத்த சர்வேயின்படிதான், 2026 தேர்தலில் திமுக 200 தொகுதிகளைக் கைப்பற்றும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக முதல்வர் கூடுதலாக உழைத்துக் கொண்டிருக்கிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாரத்தில் நான்கு நாள்கள் மாவட்டந்தோறும் சென்று ஆய்வு மேற்கொள்கிறார்" என்றார்.