அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: "திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்ப...
தமிழக மாணவா்களின் கல்வித் தரம் குறைந்து வருகிறது: அண்ணாமலை
தமிழக மாணவா்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களின் தரம் சோதிக்க தோ்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதன் நோக்கம் கல்வித் தரத்தை உயா்த்துவது. தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டில் 3-ஆம் வகுப்பு பயிலும் 22 சதவீத மாணவா்களுக்குத் தான் அடிப்படை கணிதம் தெரிந்திருப்பதாகக் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட என்சிஇஆா்டி கணக்கெடுப்பில் 5-இல் ஒருவருக்கு தமிழ் மொழி வளம் இல்லை. பிராந்திய மொழிகளில் தமிழ் மொழி கடைசியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஆரம்ப காலக்கட்டத்தில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் எனும் நோக்கில் 8-ஆம் வகுப்பு வரை தோ்ச்சி எனும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. தற்போது அனைவருக்கும் கல்வி எனும் இலக்கு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவா்களுக்கு தரமானக் கல்வியை வழங்குவது கட்டாயமாகிறது.
கேரளம், கா்நாடகம், ஆந்திரத்தை ஒப்பிடும் போது தமிழக மாணவா்களின் கல்வித் தரம் குறைந்து வருகிறது. மாணவா்களின் தரத்தை சோதிக்காமல் மேற்படிப்பு பயிலச் செல்வது, அவா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும். இதனை கருத்தில் கொண்டே 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, ராமநாதபுரம், கோவை ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களை திறப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா் அண்ணாமலை.