அருண் தெய்வம் மாதிரி! ராணவ் மீது வன்மம் ஏன்? செளந்தர்யாவை விமர்சித்த குடும்பத்தினர்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ராணவ் மீது ஏன் அத்தனை வன்மம் என நடிகை செளந்தர்யாவிடம் அவரின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் போட்டியின்போது காயமுற்று வீழ்ந்துகிடந்தபோது, ராணவ் நடிக்கிறான், ராணவ் நடிக்கிறான் என தொடர்ந்து அழுத்தமாகக் கூறுவது ஏன்? என ராணவ் சகோதரி கேள்வி எழுப்பினார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துசெல்கின்றனர்.
79வது நாளான நேற்று தீபக், ரயான் மற்றும் மஞ்சரி குடும்பத்தினர் வருகைப் புரிந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று ராணவ் குடும்பத்திலிருந்து அவரின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் வருகை புரிந்தனர்.
இதில் ராணவ்வின் தந்தை தற்காப்புக் கலை பயிற்சியாளர் என்பதால், பிக் பாஸ் வீட்டில் இருந்த பெண் போட்டியாளர்களுக்கு தற்காப்பு கலையைப் பயிற்றுவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் போட்டியின்போது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு விழுந்த ராணவ்வுக்கு உதவியதால், அருண் பிரசாத்தை அவரின் குடும்பத்தினர் வெகுவாகப் பாராட்டினர். அருணை தெய்வம் போன்று பார்ப்பதாகவும் கூறினர்.
மேலும், பிக் பாஸ் வீட்டில் யாருடன் முரண்படுகிறீர்கள் என பிக் பாஸ் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராணவ்வின் சகோதரி, ராணவ் அடிபட்டு கிடக்கும்போது அவன் நடிக்கிறான் என அழுத்தமாகக் கூறியவர் செளந்தர்யா. என் அண்ணன் மீது செளந்தர்யாவுக்கு என்ன வன்மம் இருக்கிறது. வலியில் துடிப்பவனை ஏன் நடிக்கிறான் எனக் கூற வேண்டும் என அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு செளந்தர்யா செய்வதறியாமல் திணறுகிறார். இந்த விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.