Plane crash : அவசரமாகத் தரையிறங்குகையில் வெடித்துச் சிதறிய விமானம்... 42 பேர் பலி | அதிர்ச்சி வீடியோ
அஜர்பைஜான் தலைநகரிலிருந்து ரஷ்யாவுக்குப் புறப்பட்ட பயணிகள் விமானம், கஜகஸ்தானில் அவசரமாகத் தரையிறங்குகையில் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜே2-8243 விமானம், 67 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் என 72 பேருடன் ரஷ்யாவின் க்ரோஸ்னி நோக்கிப் புறப்பட்டது. ஆனால், க்ரோஸ்னியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் திருப்பிவிடப்பட்டது. இதனால், விமானத்தை அவசரமாக கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையத்தில் சூழல் ஏற்பட்டது.
அப்போது, சிறிது நேரம் வானில் வட்டமடித்தபடி இருந்த விமானம் அக்தாவ் விமான நிலையத்துக்கு 3 கி.மீ முன்பாகவே வேகமாகத் தரையிறங்குகையில் தீப்பிடித்து கடும் விபத்துக்குள்ளானது. அதைத்தொடர்ந்து, உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு வந்த அவசரகால உதவி அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கஜகஸ்தானின் எமெர்ஜென்சி அமைச்சகத்தின் கூற்றுப்படி 42 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சுமார் 27 பேர் உயிர் பிழைத்ததாகவும், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இது தொடர்பாக அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான விபத்துக்குள்ளான சம்பவத்தைக் குறிப்பிட்டு, கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறது. மறுபக்கம், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு உட்பட வேறு பிரச்னை ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...