திண்டுக்கல்: `141 மனுக்கள்; 8 வருசமா அலையிறேன்; நடவடிக்கை?’ - ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய முதியவர்
மாவட்டந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் அலுவலங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களிடம் மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு ஏற்படுத்தவே இந்த கூட்டம் கலெக்டர் தலைமையில் நடக்கிறது. ஆனால் மக்கள் குறைதீர் கூட்டங்களில் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காதில் பூ வைத்தும், செருப்பு மாலை அணிந்தும், கழுதையில் ஊர்வலம் வந்தும், உடம்பில் கரும்புள்ளிகள் பூசி கொண்டும் வந்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மண்ணெண்ணை கேன்களுடன் வந்து தீக்குளிக்க முயற்சிக்கின்ற நிகழ்வுகளும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த, எரியோடு பகுதியைச் சேர்ந்த முருகன்(60) போலி பட்டாவுக்கான புகார் மனுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி 8 ஆண்டுகளாக போராடியும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறி, உரத்த குரலில் ஆவேசமாக கத்திய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
முருகன் போலி பட்டா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2016 முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறார். திங்கள்கிழமை குறைதீர் கூட்டத்தில் மனுகொடுக்கும் இடத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி கத்தத் தொடங்கினார். ''எத்தனை வருஷமா மனு கொடுக்குறது... 8 வருஷமா போராடிகிட்டு இருக்கேன். அதிகாரிகள் நிர்வாகம் செய்வது சரியில்லை. திருட்டு பத்திரத்திற்கு மனு கொடுத்தவனுக்கு உடனடியாக பதில் கிடைக்கிறது. 8 வருஷமாக போராடுறேன். என்னுடைய படிப்பு, வாழ்க்கை எல்லாமே போய்விட்டது.
மனு கொடுத்தா மனுவ காணோம் என்கிறார்கள். உங்களின் காலை கழுவி குடிக்க வேண்டுமா. இனிமேல் ஆபீசுக்கு வராதீங்கனு சொல்லுங்க. இல்லனா பணக்கட்டோட வாங்கனு சொல்லுங்க. சி.ஏ., படிச்ச முட்டாள் நான். மோசமான நிர்வாகத்தை நம்பி 8 வருஷமா மனுகொடுத்து அலுத்து போனேன். பூராம் பொய். பூராம் நாடகம். இங்க அதிகாரிகள் மோசம், ஊழல் பெருத்துப்போச்சு. எல்லா இடங்களிலும் பொய்தான். தமிழகத்தில் நிர்வாகம் சரியில்லை” என்றார். முருகன் உரத்த குரலில் பேசியபோது மனு கொடுக்க வந்த சிலரும் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர் என அவருக்கு ஆதரவாக பேசினர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய முருகன், ``போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது குறித்து வருவாய்த்துறை, நில அளவை துறை, காவல்துறை, முதல்வர் தனிப்பிரிவு, உங்கள் ஊரில் உங்களைத் தேடி, கலெக்டர் என இதுவரை 141 மனுக்கள் கொடுத்துள்ளேன்.
அதிகாரிகளை நேரில் சந்தித்து கேட்டால் நீங்கல் அனுப்பிய மனுவை காணவில்லை என கூறுகின்றனர். தற்போது மீண்டும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்புகின்றனர் என்ன நடக்கிறது என பார்ப்போம்” எனக் கூறி புறப்பட்டார் விரக்தியுடன்.