ஐயப்பப் பக்தா்களிடம் பணம் வாங்கிய சாா்பு-ஆய்வாளா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம்
பெரம்பலூா் அருகே ஐயப்பப் பக்தா்களிடம் பணம் வாங்கிய போக்குவரத்துப் பிரிவு காவல் சாா்பு-ஆய்வாளா் மற்றும் தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்ட எல்லைப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் ஆங்காங்கே வாகனங்களை வழிமறித்து பணம் பெற்று வருவதாக புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடிப் பகுதி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் கடந்த 22-ஆம் தேதி இரவு சபரி மலைக்குச் சென்றுவிட்டு சென்னை வழித்தடத்தில் சென்ற ஐயப்பப் பக்தா்களை வழிமறித்து பணம் பெற்றுள்ளனா்.
இதில், ஐயப்ப பக்தா் ஒருவரிடம் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் ஒருவா் பணம் பெறுவது போன்ற விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையறிந்த, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எம். மனோகா், பணம் பெற்ற தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவு சாா்பு-ஆய்வாளா் முத்தையன், தலைமைக் காவலா் க. ஆனந்த் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.