முடிவுக்கு வந்தது நூல் அஞ்சல் சேவை!
நூல் அஞ்சல் சேவையை டிசம்பர் 18ஆம் தேதியுடன் இந்திய அஞ்சல் துறை நிறுத்தியுள்ளது.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அஞ்சல் துறை எடுத்துள்ள இந்த முடிவு புத்தக ஆர்வலர்கள் மற்றும் புத்தகப் பதிப்பகங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிக்க : இரண்டாம் உலகப் போரில் துப்பாக்கி ஏந்த மறுத்த ராணுவ வீரன்!
இந்திய அஞ்சல் துறையானது, 19,101 அஞ்சல் எண்களுக்கு கீழ் 1,54,725 தபால் நிலையங்களை உள்ளடக்கியது. இதன்காரணமாக, பெரும்பாலான பார்சல்களை ஒரு வாரத்திற்குள் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்துள்ளது. மேலும், உள்ளூருக்குள் அனுப்பப்படும் பார்சல்கள் அடுத்த நாளே டெலிவரி செய்யப்படுகிறது.
இதனிடையே, கல்வி மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும், நாடு தழுவிய அறிவைப் பரப்புவதற்கு வசதியாகவும் ’நூல் அஞ்சல்’ சேவையை அறிமுகம் செய்து அஞ்சல் துறை செயல்படுத்தி வந்தது.
நாட்டில் எந்த தனியார் அஞ்சல் சேவைகளிலும் இல்லாத வகையில், நூல் அஞ்சல் சேவையில் ஐந்து கிலோ புத்தகங்களை அனுப்புவதற்கு வெறும் 80 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது.
குறிப்பாக வாசிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக இந்த மானிய விலையில் அஞ்சல் சேவையை வழங்கி வந்தது. புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் மாத / வார இதழ்கள் என அனைத்திற்கும் இச்சலுகைகள் வழங்கப்பட்டது.
இந்த சேவையின் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வந்த நிலையில், எந்த விவாதமும், முன்னெச்சரிக்கையும் அல்லது வாடிக்கையாளர்களின் ஆலோசனையும் இல்லாமல், நூல் அஞ்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் திடீரென்று இரவோடு இரவாக ’நூல் அஞ்சல்’ விருப்பத்தை மென்பொருளில் இருந்து நீக்கியுள்ளது அஞ்சல் துறை. இது சில அஞ்சல் துறை ஊழியர்களுக்குக் கூட தெரியவில்லை.
இந்தச் சேவையை ரத்து செய்தது, பதிப்பகத் துறையை மிகப் பெரிய பாதிப்புக்கு தள்ளியுள்ளது. ரூ. 100 விலையுள்ள புத்தகங்களைப் பெறுவதற்காக ரூ. 78 அஞ்சல் கட்டணம் செலுத்துவதற்கு வாசகர்கள் தயங்குகிறார்கள். இந்த முடிவானது, இந்தியாவில் ஏற்கெனவே பலவீனமாக உள்ள வாசிப்பு கலாசாரத்தை மேலும் பாதிப்படைய வைக்கும் அபாயத்துக்கு தள்ளும் வகையில் உள்ளது.
விலை வித்தியாசம்
நூல் அஞ்சலுக்கும் பதிவு செய்யப்பட்ட அஞ்சலுக்குமான விலையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது. ஒரு கிலோவுக்கு நூல் அஞ்சலில் ரூ. 32 பெறப்பட்ட நிலையில், தற்போது ரூ. 78 கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இரண்டு கிலோவுக்கு ரூ. 45-ல் இருந்து ரூ. 116-ஆகவும், ஐந்து கிலோவுக்கு ரூ. 80-ல் இருந்து ரூ.229 ஆகவும் கட்டணம் அதிகரித்துள்ளது.
இறக்குமதி வரி
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று, வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் மாதிரி நூல்களுக்கும் (சாம்பிள் காபி) 5 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அச்சிடப்பட்ட சில நூல்களை வெளிநாட்டு பதிப்பகங்கள் அவர்களின் மொழியில் மொழிபெயர்ப்பது வழக்கம். அதுபோன்ற சூழலில் அவர்கள் மொழியில் அச்சிடப்பட்ட நூல்கள் சிலவற்றை இந்திய பதிப்பகத்துக்கு அனுப்புவார்கள்.
இதுபோன்ற நடைமுறைக்கு இதுவரை இறக்குமதி வரி விதிக்கப்படாத நிலையில், தற்போது 5 சதவிகிதம் விதிக்கப்படுகிறது.
வணிக ரீதியில் இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரி விதிப்பது நியாயமாக இருந்தாலும், மாதிரி புத்தகங்களுக்கும் வரி விதிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொலைநோக்கு பார்வையற்ற இந்த முடிவின் பின்விளைவுகளால், எழுத்தறிவு, கல்வி மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கான நாட்டின் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்க பின்னடைவை சந்திக்க நேரிடும்.