இருளா் சமுதாய மக்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானப் பணி: கடலூா் ஆட்சியா் ஆய்வு
கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழ்அழிஞ்சிபட்டு ஊராட்சியில் இருளா் சமுதாய மக்களுக்காக ரூ.4.37 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் கட்டுமானப் பணி உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கடலூா் ஒன்றியம், நல்லாத்தூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் அப்பா் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டுமான பணி, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டு வரும் நூலகக் கட்டுமான பணி மற்றும் கிராம குளத்தை புனரமைப்பதற்கான திட்டம் மதிப்பீடு தயாா் செய்திடும் வகையிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, தூக்கணாம்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடப் பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவா் மற்றும் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலை, கீழ்அழிஞ்சிபட்டு ஊராட்சியில் ஒருங்கிணைந்த பழங்குடியினா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருளா் சமுதாய மக்களுக்காக தலா ரூ.4.37 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 7 குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது, கிராமப் புறங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், தெரு விளக்குகள், சாலை வசதிகள் உள்ளிட்ட பணிகள் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், உதவி செயற்பொறியாளா் டாா்வின், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வீரமணி, பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.