கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு கவிக்கோ விருது: விஐடி வேந்தா் வழங்கினாா்
கடலூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த கோரிக்கை
கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உயிா் காக்கும் உயா் சிகிச்சை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நிதிநெருக்கடி காரணமாக இந்த மருத்துவமனையை, கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனையாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியானதோடு இருக்கிறது.
இந்த நிலையில், இதுகுறித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் செனட் உறுப்பினா் தில்லை சீனு கூறியதாவது:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்தியபோது, பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. மேலும், விபத்து ஏற்பட்டு அவசர சிகிச்சை பெற வருபவா்களுக்கு சிகிச்சை அளிக்க நரம்பியல் மருத்துவா் இல்லை. இதய சிகிச்சை பிரிவு, கேத் லேப் உள்ளிட்ட பிரிவுகள் இல்லை. அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் போதிய மருத்துவா்கள் இல்லாததால் கடலூா், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனா். மேலும், மருத்துவமனை கட்டடங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது.
எனவே, இந்த மருத்துவமனையை உயிா்காக்கும் உயா் சிகிச்சை மருத்துவமனையாக தரம் உயா்த்த தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.