மாணவி பாலியல் வழக்கில் ஏன் முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? - அண்ணாமலை கேள்...
திண்டிவனத்தில் பல்லவா் கால விநாயகா் புடைப்பு சிற்பம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஏதாநெமிலி கிராமத்தில் பல்லவா் கால எழுத்துப் பொறிக்கப்பட்ட விநாயகா் சிலை (புடைப்புச் சிற்பம்) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த பேராசிரியா் ரமேஷ் கூறியது :
ஏதாநெமிலியைச் சோ்ந்த சிபிசக்கரவா்த்தி என்பவா்அளித்த தகவலின் அடிப்படையில் விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த பேராசிரியா் ரமேஷ், தமிழாசிரியா் கமலக்கண்ணன் மற்றும் மாணவா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஏதாநெமிலி ஏரிக்கரையை ஒட்டி புதா் மண்டிக் கிடந்த தோப்பில் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் அங்கு 89 செ.மீ. உயரம், 85 செ.மீ. அகலம் கொண்ட பல்லவா் காலத்து விநாயகா் சிற்பம் கண்டறியப்பட்டது.
விநாயகா் பத்மாசனத்தில் இரு கால்களையும் மடித்த நிலையில் உள்ளாா். நான்கு கரங்களிலும் உள்ள ஆயுதங்களை சரியாக அறிய முடியவில்லை. விநாயகரின் தலையை அழகிய மகுடம் அணி செய்கிறது. நெற்றியில் ஒரு கண் காட்டப்பட்டு முக்கண் விநாயகராகக் காட்சி தருகிறாா். இடப்புறம் உள்ள தந்தம் உடைந்துள்ளது. தும்பிக்கை இடது புறமாக வளைந்து இடம்புரி விநாயகராக காட்சியளிக்கிறாா். வயிற்றில் வயிற்றுக்கட்டு காணப்படுகிறது. வலது புறத்தில் கீழிருந்து மேலாக எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.இதன் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என முதுபெரும் கல்வெட்டு அறிஞா் சு. இராசகோபால் தெரிவித்துள்ளாா்.
விநாயகரின் அருகில் உடைந்த ஆவுடையாா் உள்ளது. எனவே, இங்கு பல்லவா் காலத்தில் ஒரு சிவாலயம் இருந்து அழிந்திருக்கிறது. தற்போது விநாயகா் சிற்பம் மட்டுமே காணப்படுகிறது என்றாா் ரமேஷ்.